வீடு விற்பதாக கூறி ரூ.57 லட்சம் மோசடி
திருச்சியில் வீடு விற்பதாக கூறி ரூ.57 லட்சம் மோசடி செய்ததாக 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
திருச்சி, ஜூன்.22-
திருச்சியில் வீடு விற்பதாக கூறி ரூ.57 லட்சம் மோசடி செய்ததாக 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
வீடு விற்பதாக மோசடி
திருச்சி கண்டோன்மெண்ட் வார்னர்ஸ்ரோட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் ராஜூ (வயது 35). தொழிலதிபரான இவரிடம், சுபா கிருஷ்ணசாமி என்பவருக்கு சொந்தமான திருச்சி கலெக்டர் அலுவலக சாலையில் உள்ள 3,600 சதுரடி வீட்டை ரூ.2 கோடியே 30 லட்சத்துக்கு விற்பனை செய்வதாக சுபா, அவரது கணவர் கிருஷ்ணசாமி, வார்னர்ஸ்ரோட்டை சேர்ந்த கேஷாப்நாராயணன் ஆகியோர் விலை நிர்ணயம் செய்து இருந்தனர்.
ஆனால் மேற்படி வீடு தனியார் நிதி நிறுவனத்தில் அடமானத்தில் இருப்பதாகவும், வீட்டை மீட்க ரூ.1 கோடியே 6 லட்சத்தை முன்பணமாக தரும்படி ராஜூவிடம் கேட்டுள்ளனர். அவரும் பல்வேறு தேதிகளில் பணத்தை கொடுத்து கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 23-ந் தேதி கிரைய உடன்படிக்கை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால் ஒப்பந்தப்படி அந்த வீட்டை அடமானத்தில் இருந்து மீட்காமலும், ராஜூவுக்கு வீட்டை கிரையம் செய்து கொடுக்காமலும் காலம் தாழ்த்தி வந்துள்ளனர்.
3 பேர் மீது வழக்கு
இதற்கிடையே ராஜூவுக்கு தெரிவிக்காமல் சம்பந்தப்பட்ட அந்த வீடு ரூ.3 கோடிக்கு 20 லட்சத்துக்கு விற்பனைக்கு உள்ளதாக இணையதளத்தில் விளம்பரம் செய்துள்ளனர். இது பற்றி அறிந்த ராஜூ, சுபா, கிருஷ்ணசாமி, கேஷாப்நாராயணன் ஆகியோரிடம் பணத்தை திருப்பி கேட்டுள்ளார். இதையடுத்து அவர் முன்பணமாக கொடுத்த ரூ.1 கோடியே 6 லட்சத்தில் ரூ.49 லட்சத்தை கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் திருப்பி கொடுத்துள்ளனர்.
மீதமுள்ள ரூ.57 லட்சத்தை கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து ராஜூ கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 3 பேரையும் சந்தித்து பணத்தை கேட்டபோது, அவரை தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்தாக கூறப்படுகிறது. இது குறித்து அவர் திருச்சி ஜூடிசியல்மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு எண்-1ல் மனுத்தாக்கல் செய்தார். இதையடுத்து கோர்ட்டு உத்தரவுபடி, சுபா, கிருஷ்ணசாமி, கேஷாப்நாராயணன் ஆகிய 3 பேர் மீது மாநகர குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கோசலைராமன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.