தேயிலை நிறுவன உரிமையாளரிடம் ரூ.93 லட்சம் மோசடி: 3 போ் கைது


தேயிலை நிறுவன உரிமையாளரிடம் ரூ.93 லட்சம் மோசடி: 3 போ் கைது
x

ஆன்லைன் முதலீட்டு பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக கூறி தேயிலை ஏற்றுமதி நிறுவன உரிமையாளரிடம் ரூ.93 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக முகவர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் குன்னூரை சேர்ந்த தேயிலை ஏற்றுமதி நிறுவன உரிமையாளர் ஒருவருக்கு இன்ஸ்டாகிராமில் அறிமுகம் இல்லாத நபர் ஒரு வலைத்தள முகவரி லிங்க் ஒன்றை அனுப்பியுள்ளார்.

இந்த 'லிங்கை கிளிக்' செய்து, அதில் சில 'டாஸ்க்'குகளை நிறைவேற்றி, அதன் மூலம் பணம் முதலீடு செய்தால் பணம் இரட்டிப்பாக தரப்படும் என்று ஆசை வார்த்தை கூறியுள்ளனர். இதை நம்பிய தேயிலை ஏற்றுமதி நிறுவன உரிமையாளர் முதலில் 100 ரூபாய் முதலீடு செய்துள்ளார். அந்த பணம் இரட்டிப்பானதும் அதன் பின்னர் ஆயிரம் ரூபாய் முதலீடு செய்துள்ளார். ஆயிரங்கள் பின்னர் லட்சக்கணக்கில் மாறியது.

இவர் முதலீடு செய்த பணத்திற்கான இரட்டிப்புத்தொகை நேரடியாக இவரது வங்கிக்கணக்கிற்கு கொண்டு வரப்படாமல் ஆன்லைன் மூலம் வேறு ஒரு கணக்கில் இருப்பதாகவும், அந்த கணக்கில் இருந்து தேவைப்படும் சமயத்தில் உங்களது வங்கிக் கணக்கிற்கு மாற்றிக் கொள்ளலாம் என்றும் மோசடி பேர்வழிகள் இவரிடம் கூறியுள்ளனர். இதை நம்பிய அவர் தனது வங்கி கணக்குக்கு பணம் வராமலேயே வேறு ஒரு கணக்கில் தனக்கான தொகை இரட்டிப்பாகி வருகின்ற எண்ணத்தில் ரூ.40 லட்சம் முதலீடு செய்துள்ளார். ஆனால் பணத்தை திருப்பி அனுப்பவில்லை.

ரூ.93 லட்சம் மோசடி

இவ்வாறு கடந்த (செப்டம்பர்) ஒரு மாத காலத்தில் அவரிடம் சுமார் ரூ.93 லட்சத்தை ஏமாற்றி வாங்கியுள்ளனர். இதுகுறித்து ஊட்டி சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்டவர் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சேலம் இளம்பிள்ளை பெருமாள் கவுண்டன்பட்டியை சேர்ந்த எழில் ராஜா (வயது 32), தென்காசி மாவட்டம் கடையநல்லூர் தலைவன் கோட்டை பகுதியை சேர்ந்த முத்துராஜ் (32), வெள்ளக்கல் பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணியம் (27) ஆகியோரை கைது செய்தனர். மேலும் இந்த மோசடி கும்பலின் வங்கி கணக்கில் இருந்த ரூ.25 லட்சம் முடக்கப்பட்டு உள்ளது. இவர்கள் முகவர்களாக பணியாற்றியது தெரியவந்தது. இவர்கள் தமிழ்நாடு மற்றும் இந்தியா முழுவதும் பலரிடம் இதேபோல் கோடிக்கணக்கில் மோசடி செய்துள்ளனர்.

இந்த குழுவிற்கு தலைவனாக செயல்பட்ட தூத்துக்குடி இலுப்பை பூரணியை சேர்ந்த கோபிநாத் சாஸ்தா என்பவர் விமானம் மூலம் துபாய் தப்பி சென்று விட்டார். இதைத்தொடர்ந்து அவருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டு உள்ளது. எனவே அவர் எந்த நேரமும் கைது செய்யப்படலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.


Next Story