ஆர்.எஸ்.பாரதி 500 கோடியே ஒரு ரூபாய் நஷ்ட ஈடு தரவேண்டும் -அண்ணாமலை அறிக்கை
என் மீது சுமத்தப்பட்ட ஆதார மற்ற குற்றச்சாட்டுக்கு 48 மணி நேரத்தில் விளக்கம் அளிக்காவிட்டால் ஆர்.எஸ். பாரதி மீது வழக்கு தொடுக்கப்படும் என்றும், 500 கோடியே ஒரு ரூபாய் இழப்பீடு தர வேண்டும் என்றும் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார்.
சென்னை,
தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் அவர்களது உறவினர்களின் சொத்து பட்டியலை வெளியிட்டு முறைகேடு புகாரை தமிழ் புத்தாண்டான கடந்த 14-ந்தேதி தெரிவித்தார்.
இந்த விவகாரத்தில் ரூ.500 கோடி நஷ்ட ஈடு கேட்டு, தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அண்ணாமலைக்கு வக்கீல் நோட்டீசு அனுப்பினார்.
உரிமை இருக்கிறதா?
இதற்கு பதில் அளித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் துபாய் பயணம் குறித்து கேள்வி எழுப்பியதற்காக ரூ.100 கோடி இழப்பீடு கோரி சட்ட அறிக்கையை (வக்கீல் நோட்டீஸ்) தொடர்ந்து, மீண்டும் ஒரு முறை என் மீது தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ரூ.500 கோடி இழப்பீடு கேட்டு சட்ட அறிக்கை அனுப்பியுள்ளார்.
கோடிகளில் சொத்துகளை குவித்து வைத்திருக்கும் தி.மு.க.வினர் இருக்கும்போது, என்னிடம் மேலும் ரூ.500 கோடி கேட்கிறார் ஆர்.எஸ்.பாரதி. நான் கொடுத்த பத்திரிகையாளர் சந்திப்பை பார்த்ததற்கு ஆர்.எஸ்.பாரதிக்கு நன்றி.
நீங்கள் (ஆர்.எஸ்.பாரதி) வெளியிட்ட சட்ட அறிக்கையில், தி.மு.க.வினருக்கு சொந்தமான ரூ.3,478.18 கோடி மதிப்பிலான பள்ளிகளும், ரூ.34,184.71 கோடி மதிப்பிலான கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களின் மதிப்பு பொய்யானது என்று தெரிவித்துவிட்டு, அடுத்த வரியில் ஒருவர் தி.மு.க. உறுப்பினர் அல்லது நிர்வாகியாக இருந்தாலும், அவருக்கு சொந்தமான சொத்துகள் மற்றும் நிறுவனங்கள் கட்சியின் சொத்தாக மாறாது என்று குறிப்பிட்டுள்ளீர்கள். ஒரு புறம் இது தி.மு.க. சொத்து இல்லை என்றும், மறுபுறம் வழங்கப்பட்ட தி.மு.க.வினரின் சொத்து விவரம் பொய்யென்று கூறுவதற்கு மட்டும் ஆர்.எஸ்.பாரதிக்கு உரிமை இருக்கிறதா?.
சி.பி.ஐ.யிடம் ஆதாரம்
கடந்த தி.மு.க. ஆட்சிக்காலத்தில் சென்னை மெட்ரோ ரெயில் தொடர்பாக நடைபெற்ற ஊழல் குறித்து அனைத்து ஆதாரங்களும் எங்களிடம் உள்ளது. அவற்றை சி.பி.ஐ.யிடம் அளிக்க உள்ளோம். இந்த ஊழலில் தொடர்புடைய அனைவருக்கும் விளக்கம் கேட்டு சம்மன் வரும் வரை ஆர்.எஸ்.பாரதி பொறுமையாக இருக்க வேண்டும்.
அதுமட்டுமல்லாமல், முன்னுக்குப்பின் முரணான சில கருத்துகளை ஆர்.எஸ்.பாரதி தனது தமிழ் சுருக்கத்திலும், ஆங்கில சட்ட அறிக்கையிலும் தெரிவித்துள்ளார்.
நோபல் ஸ்டீல் நிறுவனத்திடம் எந்த ஒப்பந்தமும் கையெழுத்து இடப்படவில்லை என்று தெரிவித்துள்ளார். மற்றொன்றில் நோபல் ஸ்டீல்ஸ் நிறுவனத்துடன் போட்ட ஒப்பந்தத்துக்கும், உதயநிதி ஸ்டாலினுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று தெரிவித்துள்ளார். நோபல் புரமோட்டர்ஸ், நோபல் பிரிக்ஸ், நோபல் ஸ்டீல்ஸ் என்ற நிறுவனங்களில் பஷீர் அகமது இயக்குனராக இருந்துள்ளார். உதயநிதி ஸ்டாலின் மேல் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கு ஆர்.எஸ்.பாரதி ஏன் பதில் அளிக்கிறார்.
500 கோடியே ஒரு ரூபாய்
ஆருத்ரா நிதி நிறுவனத்திடம் ரூ.84 கோடி நான் பெற்றுக்கொண்டதாக ஆதாரமற்ற பொய் குற்றச்சாட்டை என் மீது ஆர்.எஸ்.பாரதி சுமத்தி உள்ளார். என் மீதும், பா.ஜ.க. மீதும் ஆதாரமற்ற குற்றச்சாட்டை பொதுவெளியில் வைத்ததற்கு, 500 கோடியே ஒரு ரூபாய் நஷ்டஈடாக கோருகிறேன்.
இதை நான் 'பி.எம். கேர்ஸ்' நிதிக்கு செலுத்த விரும்புகிறேன். அடுத்த 48 மணி நேரத்தில் என் மீதும், எனது கட்சியின் மீதும் சுமத்தப்பட்ட ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளிக்காவிட்டால் ஆர்.எஸ்.பாரதி மீது தகுந்த வழக்கு தொடுக்கப்படும்.
மேலும், ஆர்.எஸ்.பாரதி அனுப்பிய சட்ட அறிக்கைக்கு பதிலும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை வைத்தமைக்கு இழப்பீடு கோரும் சட்ட அறிக்கையும் விரைவில் உங்களுக்கு வந்து சேரும் என்று தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.