தண்ணீர் இன்றி வறண்டு கிடக்கும் ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய்
ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய் தண்ணீரின்றி வறண்டு காட்சியளிக்கிறது. நெல் விவசாய பணி தொடங்கப்பட்டுள்ள நிலையில் பருவமழை கை கொடுக்குமா? என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
ஆர்.எஸ்.மங்கலம்,
வறண்ட கண்மாய்
ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழையை எதிர்பார்த்தே விவசாயிகள் விவசாய பணிகளை தொடங்குவார்கள். இந்த ஆண்டும் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் ஆர்.எஸ்.மங்கலம், மங்கலம், சோழந்தூர் ஆனந்தூர், கோவிந்தமங்கலம், சனவேலி என மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து விவசாய கிராமங்களிலும் நெல் விவசாய பணிகளை விவசாயிகள் தொடங்கினர்.
ஆனால் போதிய மழை பெய்யாததல் வைகை அணையிலும் தண்ணீர் இருப்பு போதிய அளவில்லை. ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாயும் தண்ணீரின்றி வறண்டு காட்சியளிக்கிறது. இதனால் பருவ மழை அதிகமாக பெய்தால் மட்டுமே ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாயில் தண்ணீர் வரத்து இருப்பதோடு, நெல் விவசாயமும் நன்றாக இருக்கும் என விவசாயிகள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
விவசாயிகள் எதிர்பார்ப்பு
இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட அனைத்து விவசாய சங்க தலைவர் சோழந்தூர் பாலகிருஷ்ணன் கூறியதாவது, தமிழகத்தில் உள்ள மிக பெரிய கண்மாய்களில் ஒன்றுதான் ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய். ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாவில் மட்டும் 96 விவசாய கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் பெரிய கண்மாயை நம்பியே விவசாயம் செய்து வருகின்றனர்.
ஆனால் தற்போது ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய் தண்ணீர் இன்றி வறண்டு பரிதாபமாக காட்சியளிக்கிறது. இந்த ஆண்டு பருவமழை சீசனில் அதிகளவு மழை பெய்து கண்மாயில் தண்ணீர் வரத்து இருந்தால் மட்டுமே நெல், பருத்தி, மிளகாய் உள்ளிட்ட பயிர்கள் செழிப்பாக இருக்கும்.
பருவமழை கை கொடுக்கும் என்ற எதிர்பார்ப்பில் இப்பகுதியில் மட்டும் சுமார் 2 லட்சம் ஏக்கர் பரப்பளவில் நெல் விவசாய பணிகளை விவசாயிகள் தொடங்கி உள்ளனர். அதேபோல் மாவட்டம் முழுவதும் பருவமழையை எதிர்பார்த்து சுமார் 20 லட்சம் ஏக்கர் பரப்பளவில் நெல் விவசாய பணிகளை விவசாயிகள் தொடங்கியுள்ளனர் என்று கூறினார்.