ஆதிதிராவிடர், பழங்குடியினர் சொந்த நிலம் வாங்க ரூ.5 லட்சம் மானியம்


ஆதிதிராவிடர், பழங்குடியினர் சொந்த நிலம் வாங்க ரூ.5 லட்சம் மானியம்
x

தாட்கோ மூலம் ஆதிதிராவிடர், பழங்குடியினர் சொந்த நிலம் வாங்க ரூ.5 லட்சம் மானியம் வழங்கப்படுவதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.

வேலூர்

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சேர்ந்த மக்களின் சமூக பொருளாதார நிலை மேன்மையடைய சொந்தமாக விவசாய நிலம் வாங்குவதற்கு நிலத்தின் சந்தை மதிப்பு விலையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.5 லட்சம் மானியம் வழங்குவதற்கான திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. வேலூர் மாவட்டத்தில் 3 ஆதிதிராவிடர் விவசாயிகளுக்கு ரூ.15 லட்சம் மானியம், ஒரு பழங்குடியின விவசாயிக்கு ரூ.5 லட்சம் மானியம் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் 18 முதல் 65 வயதுக்கு உட்பட்ட குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்குள் இருக்கும் நபர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரர் நிலம் வாங்க உத்தேசித்துள்ள நிலம் 2½ ஏக்கர் நஞ்சை நிலம் அல்லது 5 ஏக்கர் புஞ்சை நிலமாக இருக்கலாம். நிலத்தின் சந்தை மதிப்பில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.5 லட்சம் பயனாளிக்கு வழங்கப்படும். நிலம் விற்பனை செய்பவர் ஆதிதிராவிடர், பழங்குடியினர் அல்லாத பிற இனத்தை சார்ந்தவராக இருக்க வேண்டும். மேலும் வாங்கும் விவசாய நிலத்துக்கு 100 சதவீதம் முத்திரைத்தாள் மற்றும் பதிவு கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படும். தகுதியுடைய ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தாட்கோ இணையதளமான www.tahdco.com விண்ணப்பித்து பயன்பெறலாம்.

இந்த தகவலை கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தெரிவித்துள்ளார்.


Next Story