ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் விடுப்பு எடுத்து போராட்டம்


ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள்  விடுப்பு எடுத்து போராட்டம்
x

கடலூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் விடுப்பு எடுத்து போராட்டம் நடத்தியதால் பணிகள் பாதிக்கப்பட்டன.

கடலூர்

கடலூர்,

ஊரக வளர்ச்சித்துறையில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். திணிக்கப்படும் பணி நெருக்கடிகள், காலம் கடந்தஆய்வுகள், விடுமுறை தின இரவு ஆய்வுகளை கைவிட வேண்டும். ஊராட்சி செயலாளர்களுக்கு கருவூலம் மூலம் ஊதியம் வழங்க வேண்டும்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்ட கணினி இயக்குபவர்கள் அனைவருக்கும் இளநிலை உதவியாளர்களுக்கான ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 2 நாட்கள் ஒட்டு மொத்த சிறு விடுப்பு போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் அறிவித்து இருந்தனர்.

சிறு விடுப்பு போராட்டம்

அதன்படி நேற்று கடலூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஒட்டு மொத்த சிறு விடுப்பு போராட்டத்தை தொடங்கினர். இதில் கடலூர், அண்ணாகிராமம், பண்ருட்டி, விருத்தாசலம், கீரப்பாளையம், மேல்புவனகிரி, விருத்தாசலம் உள்ளிட்ட 14 ஒன்றியங்களில் உள்ள அலுவலர்கள் வேலைக்கு வராமல் ஒட்டு மொத்த விடுப்பு எடுத்து பணியை புறக்கணித்தனர்.

இதனால் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, ஒன்றிய அலுவலகங்கள் உள்ளிட்ட ஊரக வளர்ச்சி அலுவலகங்களில் இளநிலை உதவியாளர்கள் முதல் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வரை அலுவலர்கள் பணிக்கு வரவில்லை. இதனால் அலுவலக பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன. பொதுமக்களும் கடும் அவதி அடைந்தனர்.

626 பேர் பங்கேற்பு

இதுபற்றி சங்க நிர்வாகி ஒருவர் கூறுகையில், கடலூர் மாவட்டத்தில் 1314 ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் நேற்று 626 பேர் சிறு விடுப்பு எடுத்து போராட்டத்தில் பங்கேற்றனர் என்றார். இன்று (வியாழக்கிழமை) 2-வது நாளாக சிறு விடுப்பு போராட்டம் நடக்கிறது.அடுத்த மாதம் (டிசம்பர்) 14-ந் தேதி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story