ஊரக வேலை உறுதி திட்டத்தில் முறையாக பணி வழங்க வேண்டும்
தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் முறையாக பணி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தர்மபுரியில் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கிராம மக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.
தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் முறையாக பணி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தர்மபுரியில் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கிராம மக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.
குறை தீர்க்கும் நாள் கூட்டம்
தர்மபுரி மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் சாந்தி தலைமையில் நடந்தது. கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்கள் அளித்தனர்.
கூட்டத்தில் வெள்ளாளப்பட்டி ஊராட்சி மத்தன் கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த கோரிக்கை மனுவில், எங்கள் கிராமத்தில் 120 குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எங்களுக்கு இந்த ஆண்டு ஊரக வேலை உறுதி திட்டத்தில் ஒரு நாள் கூட பணி வழங்கவில்லை. எனவே இந்த திட்டத்தில் எங்கள் கிராம மக்களுக்கு பணி வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பணி வழங்காததற்கு உரிய படியை வழங்க வேண்டும் என்று கோரியிருந்தனர்.
சுரங்கப்பாதை
ஏ.பாப்பாரப்பட்டி அருகே ஆச்சாரஅள்ளி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த கோரிக்கை மனுவில், எங்கள் பகுதியில் உள்ள ஏரி மூலம் 4 கிராமங்களில் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வந்தன. இந்த நிலையில் ஏரிக்கு தண்ணீர் வரும் நீர்வழிப் பாதையில் ஆக்கிரமிப்பு ஏற்பட்டதால் எங்கள் ஊரில் உள்ள ஏரிக்கு தண்ணீர் வரவில்லை. முத்தூர் ஏரியில் இருந்து உபரி நீரை ஆச்சார அள்ளி ஏரிக்கு விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.
சங்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த கோரிக்கை மனுவில், எங்கள் கிராமத்தில் 300 குடும்பங்கள் வசிக்கின்றன. இப்போது தர்மபுரி- ஓசூர் இடையே 4 வழி சாலை அமைக்கும் பணி நடக்கிறது. இதனால் எங்கள் பகுதியைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பள்ளிகளுக்கு சென்று வரவும், பல்வேறு பணிகளுக்கு பொதுமக்கள் சென்று வரவும் சங்கம்பட்டி அருகே சுரங்கப்பாதை அமைத்து தர வேண்டும் என்று கோரியிருந்தனர். பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று விசாரணை நடத்திய கலெக்டர் சாந்தி அந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.