மணல் திட்டை காண குவியும் சுற்றுலா பயணிகள்
ஏர்வாடி பிச்சை முப்பன் வலசை கடற்கரையில் மணல் திட்டை காண சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
கீழக்கரை,
ஏர்வாடி பிச்சை முப்பன் வலசை கடற்கரையில் மணல் திட்டை காண சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
மணல் திட்டு
கீழக்கரை அருகே உள்ள ஏர்வாடி பிச்சை முப்பன் வலசை கடற்கரையில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர். இந்த கடற்கரையில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் நடு கடலில் மணல் திட்டு ஏற்பட்டு அதில் சுற்றுலா பயணிகள் இறங்கி மணல் திட்டில் ஒதுங்கப்பட்ட பவள பாறைகளை கண்டு ரசித்து வருகின்றனர். மேலும் தமிழ்நாட்டில் இந்த கடற்கரையில் மட்டுமே கண்ணாடி இழை படகு மூலம் கடற்கரை அடியில் உள்ள பவளப்பாறை, மூலப்பாரை, கடல் ஆமை, கடல் குதிரை, கலர் மீன்கள் போன்ற அரிய வகையான உயிரினங்களை சுற்றுலா பயணிகள் நேரில் காண முடிகிறது.
இதனால் இந்த கடற்கரையில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். இதற்கான கட்டணம் மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பகம் அறக்கட்டளை சார்பில் நபர் ஒருவருக்கு ரூ.200 வசூல் செய்யப்படுகிறது. வாரத்தில் செவ்வாய்க்கிழமையை தவிர மற்ற நாட்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கண்ணாடி இழை படகு சவாரி இயக்கப் படுகிறது.
குவியும் சுற்றுலா பயணிகள்
இங்கு தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர். மேலும் சுற்றுலா பயணிகள் இளைப்பாறுவதற்காக கடற்கரை ஓரத்தில் பொழுதுபோக்கு சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டுள்ளன.
அங்கு மன்னார் வளைகுடா என்று அழகிய முறையில் இயற்கை புல்கள் மூலம் ஆங்கிலத்தில் பொறிக்கப்பட்ட எழுத்துக்களை சுற்றுலா பயணிகள் கண்டு மகிழ்கின்றனர். கண்ணாடி இழை படகு மூலம் சுற்றி பார்ப்பதற்கு சுற்றுலா பயணிகள் வந்து செல்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் சுற்றுச்சூழல் மண்டல அலுவலர் பிரதாப், துணை மண்டல அலுவலர் ராஜகுமார் மற்றும் குழுவினர் செய்து வருகின்றனர்.