தூய்மை பணியாளர்கள் ஒப்பந்தத்தினை நிறுத்தி விட்டு தினக்கூலி அடிப்படையில் நியமனம்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் தூய்மை பணியாளர்கள் ஒப்பந்தத்தினை நிறுத்தி விட்டு தினக்கூலி அடிப்படையில் நியமிக்கப்படுவதால் முன்னுரிமையில் வேலைவாய்ப்பு கேட்டு அமைச்சர் எ.வ.வேலுவிடம் தூய்மை பணியாளர்கள் மனு அளித்தனர்.
திருவண்ணாமலை நகராட்சிக்குட்பட்ட கீழ்நாத்தூர் தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் நேற்று பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டார்.
அப்போது அவரிடம் அருணாசலேஸ்வரர் கோவில் தற்காலிக தூய்மை பணியாளர்கள் 50-க்கும் மேற்பட்டோர் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
நாங்கள் அனைவரும் திருவண்ணாமலை நகர பகுதியில் வசித்து வருகிறோம். கடந்த 13 ஆண்டு காலமாக அருணாசலேஸ்வரர் கோவிலில் தனியார் ஒப்பந்ததாரர் மூலம் கோவில் தூய்மை பணியாளராக பணியாற்றி வருகிறோம்.
தற்போது ஒப்பந்தத்தினை நிறுத்திவிட்டு ஆணையாளர் உத்தரவின்படி இணை ஆணையர் மூலம் நேரடியாக தினக்கூலி அடிப்படையில் தற்காலிக நியமனம் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. 13 ஆண்டுகளாக கோவில் வேலை மட்டுமே செய்த எங்களுக்கு வேறு வேலை திடீரென தேடவும் முடியவில்லை.
இந்த வேலையை நம்பி எங்கள் குடும்பம் உள்ளது. திடீரென வேலை இல்லாமல் போனால் எங்களின் குழந்தைகளின் படிப்பு மற்றும் அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும்.
மேலும் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். ஏற்கனவே கோவிலில் தூய்மை பணியாளர்களாக பணியாற்றி வரும் எங்களுக்கு முன்னுரிமை கொடுத்து வேலைவாய்ப்பு வழங்கினால் எங்கள் குடும்பம் மற்றும் குழந்தைகள் படிப்பு மற்றும் எதிர்காலத்திற்கு உதவியாக இருக்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மனுவை பெற்றுக்கொண்ட அமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். தொடர்ந்து அந்த மனுவை கலெக்டர் முருகேசிடம் அளித்து அதன் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.