கடலூர் மாவட்டத்தில் இடி-மின்னலுடன் பரவலாக மழை


கடலூர் மாவட்டத்தில் இடி-மின்னலுடன் பரவலாக மழை
x

கடலூர் மாவட்டத்தில் நள்ளிரவில் இடி-மின்னலுடன் பரவலாக மழை பெய்தது. அப்போது மின்தடை செய்யப்பட்டதால் மக்கள் அவதி அடைந்தனர்.

கடலூர்

கடலூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தமிழக பகுதிகளின் மேல், கீழடுக்கு வளிமண்டல சுழற்சி நிலவுவதால், தமிழகம் மற்றும் புதுச்சேரி காரைக்காலில் ஒரு சில இடங்களில் லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

அதன்படி நேற்று நள்ளிரவு 1 மணி அளவில் கடலூரில் மழை பெய்ய தொடங்கியது. நேரம் செல்ல செல்ல இடி-மின்னலுடன் பெய்தது. இந்த மழை சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக கொட்டித்தீர்த்தது. அதன் பிறகு விடிய விடிய மழை தூறிக் கொண்டே இருந்தது. இந்த மழையால் சாலைகளில் ஆறாக பெருக்கெடுத்து ஓடிய மழைநீர் தாழ்வான பகுதிகளில் குளம்போல் தேங்கியது.

சாய்ந்து விழுந்த மரம்

இதற்கிடையே நள்ளிரவில் கூத்தப்பாக்கம் முருகன் கோவில் அருகில் உள்ள பழமைவாய்ந்த சவுண்டல் மரம் சாய்ந்து நடுரோட்டில் விழுந்தது. இதுபற்றி அறிந்த அதிகாரிகள் பொக்லைன் எந்திரம் மூலம் அந்த மரத்தை சாலையில் இருந்து அப்புறப்படுத்தினர். மேலும் மழை பெய்த போது, கடலூர் மாநகரம் முழுவதும் மின்வினியோகம் நிறுத்தப்பட்டது. இதனால் மாநகரமே இருளில் மூழ்கியது. பின்னர் சுமார் 1 மணி நேரத்திற்கு பிறகே மின்வினியோகம் செய்யப்பட்டது. இந்த மின்தடையால் பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்தனர்.

இதேபோல் பரங்கிப்பேட்டை, விருத்தாசலம், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், ஸ்ரீமுஷ்ணம், குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி உள்பட மாவட்டம் முழுவதும் இடி-மின்னலுடன் பரவலாக மழை பெய்தது. இதில் அதிகபட்சமாக பரங்கிப்பேட்டையில் 63.6 மில்லி மீட்டரும், குறைந்தபட்சமாக விருத்தாசலத்தில் 2 மில்லி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது.


Next Story