பகலில் சுட்டெரித்த வெயில்; இரவில் மழை
மதுரை மாநகரில் பகலில் வெயில் சுட்டெரித்தது. நேற்று இரவு முழுவதும் ஆரவாரமின்றி மழை தொடர்ந்து பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் வெள்ளமென ஓடியது.
மதுரை மாநகரில் பகலில் வெயில் சுட்டெரித்தது. நேற்று இரவு முழுவதும் ஆரவாரமின்றி மழை தொடர்ந்து பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் வெள்ளமென ஓடியது.
பகலில் வெயில், இரவில் மழை
கடந்த சில வாரங்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாக மதுரை மற்றும் சுற்று வட்டாரத்தில் தொடர்ச்சியாக மழை கொட்டுகிறது. அதிலும் இரவு நேரங்களில்தான் அதிக மழைப்பொழிவு இருக்கிறது.
இதனால் குளம், குட்டை என நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பியுள்ளன. வைகை ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. மதுரை மற்றும் சுற்றுப்பகுதிகளில் நாள்தோறும் ஏதாவது ஒரு பகுதியில் மழை பெய்கிறது. இரவு நேரங்களில் மழை பெய்தாலும், பகலில் வெயில் வெளுத்து வாங்குகிறது.
நகரில் பெரும்பாலும் இரவு நேரங்களில் மழை பெய்வதால் வியாபாரிகள், சாலையோர வியாபாரிகள் அப்பாடா தப்பித்தோம் என பெருமூச்சு விடுகின்றனர். நேற்றும் மதுரை நகரில் வெயில் சுட்டெரித்தது. இரவு நேரத்தில் மதுரை மாநகரில் பல்வேறு இடங்களில் மழை பெய்தது.
முன்னெச்சரிக்கை
கனமழையாகவும் இல்லாமல், லேசான தூறலும் இல்லாமல் தொடர்ச்சியாக ஆரவாரமின்றி மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
மேலும் சில நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்து உள்ளது. அதனால் பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் இருப்பது நல்லது என மாவட்ட நிர்வாகமும் அறிவுறுத்தியுள்ளது.