370 கிலோ கடல் அட்டை பறிமுதல்
370 கிலோ கடல் அட்டை பறிமுதல் செய்யப்பட்டது.
ராமேசுவரம்,
ராமேசுவரம் சேரான்கோட்டை கடற்கரை பகுதியில் நேற்று மாவட்ட வனத்துறையோடு சேர்ந்த உதவி வன பாதுகாவலர் கணேசலிங்கம் தலைமையில், வன பாதுகாப்பு படை வனவர் சிவசுப்பிரமணியன், வனக்காப்பாளர்கள் ஜான்சன், தமிழ்வாணன் உள்ளிட்டோர் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வனத்துறையினரை கண்டதும் அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த சிலர் தப்பி ஓடினர்.
தொடர்ந்து அந்த பகுதியில் இருந்த 16 சாக்கு பைகளை சோதனை செய்தபோது அதில் அரசால் தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள் இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து சாக்கு பைகளில் இருந்த 370 கிலோ கடல் அட்டைகளை வன பாதுகாப்பு படை குழுவினர் பறிமுதல் செய்து தப்பி ஓடிய நபர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் ராமேசுவரம் மற்றும் மண்டபத்தில் கடல் அட்டை பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் நேற்று மீண்டும் ராமேசுவரம் கடற்கரையில் 370 கிலோ கடல் அட்டை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.