கல்லூரியில் கருத்தரங்கு
கல்லூரியில் கருத்தரங்கு நடந்தது.
பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தடய அறிவியல் துறையின் சார்பாக "டிஜிட்டல் தடயவியல் மற்றும் சைபர் பாதுகாப்பில் எதிர்காலம்" என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது. இக்கருத்தரங்கிற்கு தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தின் வேந்தர் சீனிவாசன் தலைமை தாங்கினார். கல்லூரியின் முதல்வர் உமாதேவி பொங்கியா முன்னிலை வகித்தார். தடய அறிவியல் துறை தலைவர் ராணி சந்திரா வரவேற்றார். இதில் பெங்களூரு ஜீரோபாக்ஸ் இன் டேட்டா பிளாட்பார்ம் நிபுணர் தணிகைவேல் கலந்து கொண்டு பேசுகையில், சைபர் கிரைம் என்பது உலகளாவிய பிரச்சினை. எதிர்கால டிஜிட்டல் தடயவியல் துறைக்கு வலுவான சர்வதேச ஒத்துழைப்பு தேவைப்படும். இணைய அச்சுறுத்தல்களை திறம்பட எதிர்த்து போராடுவதற்கு, சட்ட கட்டமைப்பை வலுப்படுத்துவதும், எல்லைகளைத் தாண்டி உளவுத்துறையை பகிர்வதும் இன்றியமையாததாக இருக்கும்.
தொழில்நுட்பங்கள் தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருவதால், டிஜிட்டல் தடயவியல் வல்லுனர்கள் இணையக் குற்றவாளிகளுக்கு முன்னால் இருக்கவும், தனிநபர்கள், நிறுவனங்கள் மற்றும் சமூகத்தை இணைய அச்சுறுத்தல்களில் இருந்து பாதுகாக்கவும் மாற்றியமைக்கக்கூடிய, புதுமையான மற்றும் அதிநவீன கருவிகளை கொண்டிருக்க வேண்டும். புதிய தொழில்நுட்பங்களை சைபர் கிரிமினல்கள் தங்கள் தீய செயல்களுக்கு பயன்படுத்தி கொள்கிறார்கள். இது டிஜிட்டல் தடயவியல் நிபுணர்களுக்கு புதிய சவால்களை உருவாக்கியிருக்கிறது. சைபர் கிரைம் எதிர்காலத்தில் இன்னும் சிக்கலானதாகவும், பெரிய அளவிலாகவும் வாய்ப்புள்ளது. ஆகவே மாணவர்கள் சைபர் பாதுகாப்பில் உள்ள நவீன தொழில்நுட்பங்களை தெரிந்து கொண்டு தனிநபர்கள், நிறுவனங்கள் மற்றும் சமூகத்தை இணைய அச்சுறுத்தல்களில் இருந்து பாதுகாக்க வேண்டும், என்று கேட்டுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில் புல முதன்மையர்கள், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.