செந்தில் பாலாஜி இதுவரை 250 கேள்விகளுக்கு பதில் - அமலாக்கத்துறை அதிகாரிகள் தகவல்


செந்தில் பாலாஜி இதுவரை 250 கேள்விகளுக்கு பதில் - அமலாக்கத்துறை அதிகாரிகள் தகவல்
x
தினத்தந்தி 10 Aug 2023 7:52 AM GMT (Updated: 10 Aug 2023 8:09 AM GMT)

அமலாக்கத்துறையை சேர்ந்த 3 அதிகாரிகள் செந்தில் பாலாஜியிடம் சுழற்சி முறையில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை

சென்னை,

சட்ட விரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்து புழல் ஜெயிலில் அடைத்திருந்த நிலையில் அவரை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்தது.

அதன் அடிப்படையில் செந்தில் பாலாஜியை கடந்த 7-ந் தேதியில் இருந்து சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரி பவனில் அமலாக்கத்துறையின் தலைமை அலுவலகத்தில் வைத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். அமலாக்கத்துறையை சேர்ந்த 3 அதிகாரிகள் செந்தில் பாலாஜியிடம் சுழற்சி முறையில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பண பரிவர்த்தனை தொடர்பான வங்கி கணக்குகளின் ஸ்டேட்மெண்டை வைத்துக் கொண்டு விசாரணை நடைபெறுவதுடன், சமீபத்தில் சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையிலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக அமலாக்கத்துறை அதிகாரிகள் 400-க்கும் மேற்பட்ட கேள்விகளை தயார் செய்து வைத்து உள்ளனர்.

இந்த விசாரணை அனைத்தும் முழுமையாக வீடியோ பதிவு செய்யப்பட்டு வருகிறது. அமலாக்கத்துறை அதிகாரிகள் தங்களது கேள்விகள் ஒவ்வொன்றையும் 'தட்டச்சு' செய்து அதை அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் கொடுத்து எழுத்துப்பூர்வ பதிவையும் கேட்கின்றனர். அமைச்சர் செந்தில் பாலாஜியும் எழுத்துப் பூர்வமாக எழுதி கொடுத்து வருகிறார்.

இதுவரை 250 கேள்விகளுக்கு செந்தில்பாலாஜி பதில் தெரிவித்துள்ளதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பெரும்பாலான கேள்விகளுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி 'தெரியாது' 'நினைவில்லை' 'அது எனது பணம் இல்லை' என்று பதில் தெரிவித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சனிக்கிழமை வரை செந்தில் பாலாஜியிடம் இந்த விசாரணை நடைபெறும் என்றும் அதன் பிறகு அவர் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்படுவார் என்றும் கூறப்படுகிறது. செந்தில் பாலாஜி தெரிவித்து வரும் பதில்கள் அனைத்தையும் தனி வீடியோவாக அமலாக்கத்துறையினர் பதிவு செய்து வருகின்றனர். அதே போல் எழுத்துப்பூர்வ பதிவையும் வாங்கி வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Next Story