சாஸ்தா கோவில் அணை வறண்டது


சாஸ்தா கோவில் அணை வறண்டது
x

சாஸ்தா கோவில் அணை வறண்டதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

விருதுநகர்

ராஜபாளையம்,

சாஸ்தா கோவில் அணை வறண்டதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

சாஸ்தா கோவில் அணை

ராஜபாளையத்தை அடுத்த தேவதானம் அருகே சாஸ்தா கோவில் அணை அமைந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையில் உருவாகும் நகரி ஆறு தண்ணீரை கொண்டு அடிவாரத்தில் சாஸ்தா கோவில் அணை 36 அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ளது.

இந்த அணையில் நீர் தேக்கி வைக்கப்பட்டு விவசாய பணிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. தேவதானம், கோவிலூர் கிராமங்களில் அமைந்துள்ள பெரிய குளம், நகரகுளம், வாண்டையார் குளம், முகவூர் கண்மாய் வரை 11 கண்மாய்களுக்கு சாஸ்தா கோவில் அணை நீர் தேவைக்கு ஏற்ப திறந்து விடப்படும். தற்போது இந்த அணை தண்ணீர் இன்றி வறண்டு கிடக்கிறது.

நெல் சாகுபடி

இதுகுறித்து விவசாயி அருஞ்சுனை செல்வமணி கூறியதாவது:-

தற்போது சாஸ்தா கோவில் அணையில் நிரம்பும் தண்ணீரை வைத்து எண்ணற்ற விவசாய நிலங்கள் பயன்பெற்று வருகின்றன. கண்மாய்களை நம்பி 2,786 ஏக்கர் நிலத்தில் சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு பெரும்பாலும் நெல் தான் பிரதானமாக சாகுபடி செய்யப்படுகிறது.

பருவத்தில் ஐப்பசி முதல் வைகாசி வரை நெல் விவசாயம் நடைபெறும். ஆனி மாதத்தில் இருந்து புரட்டாசி மாதம் வரை பெய்யும் தென்மேற்கு பருவ மழையை கணக்கிட்டு விவசாயிகள் காய்கறிகள், பாசிப்பயிறு ஆகியவற்றை சாகுபடி செய்து வந்தனர். இந்தநிலையில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை பொய்த்ததாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

இயற்கை உரம்

இதனால் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை இல்லாததால் தற்போது சாஸ்தா கோவில் அணை முற்றிலும் வறண்டு காணப்படுகிறது. இதையடுத்து அந்த அணையை நம்பி உள்ள கண்மாய்கள் அனைத்தும் காய்ந்த நிலையில் உள்ளன. இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

இதனால் நிலத்தடி நீர் மட்டமும் குறைந்து விட்டதால், கிணற்று நீரை நம்பி காய்கறி சாகுபடி செய்ய விவசாயிகள் முன் வரவில்லை. இதனால் தேவதானம் மற்றும் கோவிலூர் கிராமங்களில் 3 ஆயிரத்திற்கு மேற்பட்ட ஏக்கர் நிலம் தற்போது தரிசாக மாறிவிட்டது. காய்கறி அறுவடைக்கு பிறகு அடி உரத்திற்காக நிலத்தில் கொழிஞ்சி வளர்ப்பது வழக்கம். கொழிஞ்சி குறிப்பிட்ட உயரம் வளர்ந்ததும், நிலத்தில் அதனுடன் உழுது விடுவர். இதனால் மண்ணில் இயற்கையாக அடி உரம் கிடைத்து விடும்.

தண்ணீர் பற்றாக்குறை

பின்னர் தொலி அடித்து, வரப்பு சாற்றி நடுகை பணிகளை தொடங்கி விடுவர். இந்தநிலையில் தற்போது கொழிஞ்சி வளர்ப்பதற்கு கூட தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

அடி உரத்தில் பற்றாக்குறை ஏற்பட்டால் விளைச்சல் குறையும். எனவே விவசாயிகளின் சிரமத்தை புரிந்து கொண்டு பாதிக்கப்பட்ட நிலத்திற்கு தேவையான அடி உரத்தை அரசு இலவசமாக வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Related Tags :
Next Story