பூக்கடை உள்ளிட்ட 60 கடைகள் திடீர் அகற்றம்


பூக்கடை உள்ளிட்ட 60 கடைகள் திடீர் அகற்றம்
x
தினத்தந்தி 18 Jun 2022 5:10 PM GMT (Updated: 18 Jun 2022 5:13 PM GMT)

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் இருந்த பூக்கடை உள்ளிட்ட 60 கடைகள் திடீரென்று அகற்றப்பட்டன.

மதுரை


மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் இருந்த பூக்கடை உள்ளிட்ட 60 கடைகள் திடீரென்று அகற்றப்பட்டன.

உத்தரவு

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு உள்ளூர் மட்டுமில்லாமல் வெளியூர், வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள். கோவிலுக்கு வரும் பக்தர்கள் சாமிக்கு தேவையான பூஜை பொருட்களை வாங்குவதற்காக அம்மன், சாமி சன்னதிகளில் ஏராளமான கடைகள் இருந்தன.

கடந்த 2018-ம் ஆண்டு சாமி சன்னதிபகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 40 கடைகள் தீயில் எரிந்து நாசமானது. இந்த கடைகளால் தான் தீ விபத்து ஏற்பட்டது என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து கோவிலுக்குள் இருந்த கடைகளை அகற்ற வேண்டும் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்தது. அதை தொடர்ந்து கோவிலுக்குள் இருந்த கடைகள் அனைத்தும் மூடப்பட்டன.

கோரிக்கை

பின்னர் கடைக்காரர்கள் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தும், அரசிடம் முறையீட்டும் மீண்டும் கடைகள் திறக்கப்பட்டன. மேலும் அந்த கடைக்காரர்கள் எங்களுக்கு மாற்று இடம் கொடுத்தால் இங்கிருந்து சென்று விடுவதாக தெரிவித்து இருந்தனர். இந்த நிலையில் பழைய சென்ட்ரல் மார்க்கெட் பகுதியில் மாநகராட்சியால் கட்டப்படும் பல அடுக்கு வாகன காப்பகத்தில் கட்டப்படும் கடைகளை தங்களுக்கு வழங்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

அதன்படி அங்கு கட்டப்படும் கடைகளை ஏலத்திற்கு விடும் போது, கோவில் கடைக்காரர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் கோவிலுக்குள் இருக்கும் பூக்கடைகள், பூஜை பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் என 75 கடைகளை அகற்ற வேண்டும் என்று கோவில் நிர்வாகம் உத்தரவிட்டது.

விதிமீறல்

இதில் 3 கடைகளில் விதிமீறல் நடந்ததால் அந்த கடைகள் ஏற்கனவே அகற்றப்பட்டதை தொடர்ந்து 72 கடைகளை அகற்ற கோவில் நிர்வாகம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. இதனால் கடைக்காரர்கள் மீண்டும் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அதில் மாநகராட்சி சார்பில் கட்டப்படும் கடைகள் கட்டி முடித்த பிறகு அங்கு செல்லும் வரை கோவிலுக்குள் கடைகளை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தனர்.

அதன்படி வழக்கு தொடர்ந்த 12 கடைகளுக்கு மட்டும் வருகிற ஜூலை மாதம் 15-ந் தேதி வரை அகற்ற தடை விதித்து கோர்ட்டு உத்தரவிட்டது. இந்த நிலையில் அம்மன் சன்னதியில் இருந்த 22 பூக்கடைகள் உள்ளிட்ட 60 கடைகளை அகற்ற உள்ளதாக ேகாவில் நிர்வாகம் கடை உரிமையாளர்களிடம் தெரிவித்தது.

60 கடைகள்

அதன்படி நேற்று காலை கோவிலில் இருந்த 60 கடைகள் அகற்றப்பட்டது. அதில் ஏராளமான கடைகளை கடை உரிமையாளர்கள் தாங்களே முன்வந்து கடைகளை அகற்றி சென்றனர். இதன் மூலம் அம்மன் சன்னதி பகுதி முழுவதும் அழகாக காட்சி அளிப்பதாக பக்தர்கள் தெரிவித்தனர்.


Next Story