புதிய பஸ்நிலைய நடைபாதையில் கடைகளை அப்புறப்படுத்த வேண்டும்
சேலம் புதிய பஸ் நிலைய நடைபாதையில் ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள கடைகளை அப்புறப்படுத்த வேண்டும் என்று கடை உரிமையாளர்களிடம், மேயர் ராமச்சந்திரன் அறிவுறுத்தினார்.
சேலம் புதிய பஸ் நிலைய நடைபாதையில் ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள கடைகளை அப்புறப்படுத்த வேண்டும் என்று கடை உரிமையாளர்களிடம், மேயர் ராமச்சந்திரன் அறிவுறுத்தினார்.
நடைபாதை
சேலம் புதிய பஸ் நிலைய வளாகத்தில் ஒருசில இடங்களில் நடைபாதைகளில் ஆக்கிரமிக்கப்பட்டு கடைகள் வைக்கப்பட்டு உள்ளன. இதனால் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே ஆக்கிரமிக்கப்பட்ட இடங்களில் வைக்கப்பட்டு உள்ள கடைகளை அப்புறப்படுத்த வேண்டும் என்று பயணிகள், பொதுமக்கள், பல்வேறு அமைப்பினர் கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து மேயர் ராமச்சந்திரன் புதிய பஸ் நிலையத்தில் நடைபாதையில் கடைகள் வைக்கப்பட்டு உள்ளதா? அனுமதி அளிக்கப்பட்ட இடத்திற்கு மேல் கடைகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளதா? ஆகியவை குறித்து ஆய்வு நடத்தினார். அப்போது நடைபாதையில் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அனுமதி இல்லாமல் வைக்கப்பட்டுள்ள பழம், பூ, உணவு பொருட்கள் விற்பனை கடைகள், காலணி கடைகளை அப்புறப்படுத்த வேண்டும் என்று கடை உரிமையாளர்களிடம் அறிவுறுத்தினார்.
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்
மேலும் பொதுமக்களுக்கு, பழம் உள்ளிட்ட திண்பண்டங்கள் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளில் வழங்கப்படுகிறதா? என்பதையும் பார்வையிட்டார். அப்போது வியாபாரிகளிடம் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தக்கூடாது என்று அறிவுரை வழங்கினார்.
பின்னர் பஸ் நிலைய வளாகத்தில் விற்பனை செய்யும் உணவு பொருட்கள் சுகாதாரமான முறையில் வைக்கப்பட்டுள்ளதா? என்பதையும் பார்வையிட்டார்.