ஒற்றை தலைமை விவகாரம்: ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிடுமா?


ஒற்றை தலைமை விவகாரம்: ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிடுமா?
x

அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளதால் ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தலில் அக்கட்சி போட்டியிடுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. வேட்பாளருக்கு கட்சி தலைமையின் கடிதம் முக்கியம் என்பதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

புதுக்கோட்டை

ஒற்றை தலைமை

அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை நீக்கி விட்டு ஒரே தலைமையாக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை நியமிக்க அனைத்து ஏற்பாடுகளையும் அவரது தரப்பில் செய்து வருகின்றனர். இதற்கு ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் எதிர்ப்பு தெரிவித்து வருவதோடு சட்டரீதியான நடவடிக்கைகளை அவர் கையாண்டு வருகிறார்.

இருப்பினும் அதனை முறியடிக்க எடப்பாடி பழனிசாமி தரப்பினர் ஆயத்தமாகி வருகின்றனர். இந்த நிலையில் ஒற்றை தலைமை விவகாரம் பெரும் விஸ்வரூபம் எடுத்துள்ளதால் தற்போது ஊரக உள்ளாட்சிகளில் காலியாக உள்ள பதவிகளுக்கு நடைபெறும் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிடுமா? என கேள்வி எழுந்துள்ளது.

வேட்பு மனு படிவம்

ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தலில் கிராம ஊராட்சி தலைவர், வார்டு உறுப்பினர் தவிர ஊராட்சி ஒன்றிய, மாவட்ட கவுன்சிலர், பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி கவுன்சிலர் பதவியிடங்கள் அரசியல் கட்சி சார்ந்தது ஆகும். இதில் போட்டியிடும் அரசியல் கட்சி வேட்பாளர்கள் கட்சி தலைமை மற்றும் மாவட்ட செயலாளர் கையொப்பமிட்ட படிவத்தை வேட்பு மனு தாக்கலுடன் இணைத்து தேர்தல் அதிகாரியிடம் சமர்ப்பிக்க வேண்டும். இதில் தங்களது கட்சி சார்பில் இந்த சின்னத்தில் இவர் போட்டியிடுகிறார் என்ற உறுதியோடு அளிக்கப்படும் இந்த கடிதம் முக்கியமாகும்.

இந்த நிலையில் அ.தி.மு.க.வில் நிலவும் பரபரப்பால் ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தலில் அக்கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு கட்சி தலைமையில் இருந்து கடிதம் பெற முடியுமா? அந்த கடிதத்தில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் கையெழுத்து இடம் பெறுமா? என பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது.

அ.தி.மு.க. போட்டியிடுமா?

புதுக்கோட்டையில் மாவட்ட கவுன்சிலர் பதவியில் 7-வது வார்டிற்கு தேர்தல் நடைபெற உள்ளது. இதில் கவுன்சிலராக இருந்த த.மா.கா.வை சேர்ந்த கூகூர் சண்முகம் மறைந்ததால் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. கடந்த முறை நடந்த தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து த.மா.கா. போட்டியிட்டது. இதில் கூகூர் சண்முகம் 15 ஆயிரத்து 343 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவருக்கு அடுத்ததாக தி.மு.க. சார்பில் போட்டியிட்ட கலியமூர்த்தி 14 ஆயிரத்து 871 வாக்குகளை பெற்றார்.

இந்த நிலையில் தற்போது நடைபெற உள்ள தேர்தலில் த.மா.கா. சார்பில் வேட்பாளர் களம் இறக்கப்படுவாரா? என அக்கட்சி வட்டாரத்தில் விசாரித்த போது தற்போது வரை எதுவும் முடிவெடுக்கவில்லை எனவும், மறைந்த கூகூர் சண்முகம் குடும்பத்தினர் போட்டியிட விருப்பமில்லை என தெரிவித்ததாகவும் கூறினர். மேலும் அ.தி.மு.க. சார்பில் வேட்பாளர் களம் இறக்கப்படுமா? என்பது தெரியவில்லை. அக்கட்சியின் தற்போதைய நிலையில் வேட்பாளருக்கு கட்சி சார்பில் வழங்கப்பட வேண்டிய 2 படிவம் கிடைக்குமா? என்ன செய்ய போகிறார்கள் என்று தெரியவில்லை. இன்று (சனிக்கிழமை) அல்லது நாளை (ஞாயிற்றுக்கிழமை) முடிவு தெரியும் என்றனர்.


Next Story