சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி இன்று முதல் கால யாகசாலை


சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி இன்று முதல் கால யாகசாலை
x

சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி முதல் கால யாகசாலை பூஜை இன்று நடக்கிறது.

பெரம்பலூர்

கும்பாபிஷேகம்

பெரம்பலூர் அருகே சிறுவாச்சூரில் உள்ள பிரசித்தி பெற்ற மதுரகாளியம்மன் கோவிலின் கும்பாபிஷேகம் வருகிற 5-ந் தேதி நடைபெறவுள்ளது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ரூ.3 கோடி செலவில் கோவில் திருப்பணிகள் முடிவுற்றுள்ளது. அதில் ராஜநிலை கதவுகளுக்கு ரூ.15 லட்சம் செலவில் தங்கம் முலாம் பூசப்பட்டுள்ளது. மேலும் கோவில் வளாகத்தில் 3 யாக சாலைகள் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. அதில் மொத்தம் 61 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

கோவில் முழுவதும் மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டிருப்பதால் இரவில் மின்னொளியில் ஜொலிக்கிறது. கும்பாபிஷேகத்தை நடத்துவதற்கு கடந்த 27-ந்தேதி கோவிலில் யானை முகத்தான் வழிபாடு நடத்தப்பட்டு, இறை அனுமதி பெறப்பட்டது. 30-ந்தேதி யானை முகத்தான் வழிபாடு, செல்வ வழிபாடு, நவ கோள்கள் வழிபாடு, பசு வழிபாடு நடத்தப்பட்டு இறை அனுமதியும், மறையோர் அனுமதியும் பெறப்பட்டது. அதனை தொடர்ந்து பூமி வழிபாடும், லட்சுமி வேள்வியும் நடந்தது. நேற்று முன்தினம் மூர்த்தி வேள்வியும், சாந்தி வேள்வியும், அஷ்ட திக்கு பாலகர்கள் வேள்வியும் நடத்தப்பட்டது.

புனித நீர்-மண் எடுக்கப்பட்டது

நேற்று காலை கும்பாபிஷேகத்திற்கான புனித நீர் மற்றும் புனித மண் எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சிவச்சாரியர்கள், பூசாரிகள் முன்னிலையில் கோவில் தெப்பக்குளத்தில் பூஜை நடத்தி குடங்களில் புனித நீர் எடுத்தனர். பின்னர் புனித மண் எடுத்தனர். இதையடுத்து இசை வாத்தியங்கள் முழங்க புனித நீர் அடங்கிய குடங்கள் கும்பாபிஷேக யாக சாலைகளை சுற்றி கொண்டு வரப்பட்டு, யாக சாலையில் வைக்கப்பட்டது. மாலையில் கிராம சாந்தி நடைபெற்றது.

கும்பாபிஷேகத்திற்கான முதல் கால யாகசாலை பூஜை இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4.30 மணிக்கு மேல் நடக்கிறது. நாளை (திங்கட்கிழமை) 2, 3-ம் கால யாகசாலை பூஜைகளும், நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) 4, 5-ம் கால யாக சாலை பூஜைகளும் நடக்கிறது. வருகிற 5-ந்தேதி காலை 6-ம் கால யாக சாலை பூஜை உள்ளிட்ட பூஜைகளும், காலை 9.45 மணிக்கு மேல் 10.15 மணிக்குள் விமானம், ராஜகோபுரத்திற்கு புனித நீர் ஊற்றியும், மதுரகாளியம்மன், அய்யனார் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு புனித நீர் ஊற்றியும் கும்பாபிஷேகம் செய்யப்படவுள்ளது. கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகளை திருப்பணிக்குழுவினர், கோவில் ஊழியர்கள், பணியாளர்கள், பூசாரிகள், கிராம மக்கள் மற்றும் உபயதாரர்கள் செய்து வருகின்றனர். மேலும் பக்தர்களுக்கு தேவையான வசதிகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டு வருகிறது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு சிறுவாச்சூர் விழாக்கோலம் பூண்டுள்ளது.


Next Story