மீன்பிடி தடைக்காலம் முடிய 3 நாட்களே உள்ளதால் கடலுக்கு செல்ல தயாராகும் சின்னமுட்டம் விசைப்படகு மீனவர்கள்


மீன்பிடி தடைக்காலம் முடிய 3 நாட்களே உள்ளதால் கடலுக்கு செல்ல தயாராகும் சின்னமுட்டம் விசைப்படகு மீனவர்கள்
x

மீன்பிடி தடைக்காலம் முடிய 3 நாட்களே உள்ளதால், சின்னமுட்டம் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்ல தயாராகி வருகிறார்கள்.

கன்னியாகுமரி

கன்னியாகுமரி:

மீன்பிடி தடைக்காலம் முடிய 3 நாட்களே உள்ளதால், சின்னமுட்டம் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்ல தயாராகி வருகிறார்கள்.

மீன்பிடி தடைக்காலம்

ஒவ்வொரு ஆண்டும் ஆழ்கடலில் மீன்கள் முட்டையிட்டு குஞ்சு பொரித்து இனப்பெருக்கம் செய்யும். இதற்காக கன்னியாகுமரி சின்னமுட்டம் முதல் திருவள்ளூர் வரையிலான கிழக்கு கடற்கரை பகுதியில் ஏப்ரல் மாதம் 15-ந்தேதி முதல் ஜூன் 14-ந்தேதி வரை 61 நாட்கள் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டு வருகிறது. அதே போல இந்த ஆண்டும் கடந்த ஏப்ரல் 15-ந்தேதி முதல் மீன்பிடி தடைக்காலம் தொடங்கியது.

அதைத்தொடர்ந்து கன்னியாகுமரி அருகே உள்ள சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தை தங்கு தளமாக கொண்டு மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வரும் 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் துறைமுகத்தின் கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. இதனால் சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகம் களையிழந்து காணப்பட்டது. எப்போதும் பரபரப்பாக காணப்படும் மீன் சந்தைகளும் வெறிச்சோடின.

கடலுக்கு செல்ல...

இந்தநிலையில் வருகிற 14-ந் தேதி நள்ளிரவுடன் மீன்பிடி தடைக்காலம் முடிவடைகிறது. அதற்கு இன்னும் 3 நாட்களே உள்ளது. எனவே விசைப்படகு மீனவர்கள், தங்களது விசைப் படகுகளை சின்ன முட்டத்தில் உள்ள படகு கட்டும் தளத்தில் கரையேற்றி உடைந்த பகுதியை சீரமைப்பது, வர்ணம் தீட்டுவது, என்ஜின்களை சீரமைப்பது போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

மேலும் தங்களது மீன்பிடி வலைகளையும் சரி செய்து தயார்படுத்தி கொண்டிருக்கிறார்கள். வருகிற 15-ந் தேதி அதி காலை 5 மணிக்கு சின்ன முட்டம் மீன்பிடி துறை முகத்தில் இருந்து விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க செல்கின்றன. இதனால் துறைமுகம் இப்போதே 'களை' கட்ட தொடங்கி உள்ளது.


Next Story