குமரியில் இதுவரை மழைக்கு 55 வீடுகள் இடிந்து சேதம் 70 மரங்கள், 12 மின்கம்பங்கள் சாய்ந்தன
குமரியில் இதுவரை பலத்த மழைக்கு 55 வீடுகள் இடிந்து சேதமடைந்தன. 70 மரங்கள், 12 மின்கம்பங்கள் சாய்ந்தன.
நாகர்கோவில்:
குமரியில் இதுவரை பலத்த மழைக்கு 55 வீடுகள் இடிந்து சேதமடைந்தன. 70 மரங்கள், 12 மின்கம்பங்கள் சாய்ந்தன.
பலத்த மழை
குமரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் தோவாளை, சுசீந்திரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் தண்ணீர் புகுந்துள்ளன. இதனால் நெற்பயிர்கள் தரையில் சாய்ந்து காணப்பட்டன. இந்தநிலை தொடர்ந்தால் நெற்பயிர் முளைத்து விடும் என விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இதேபோல் மாவட்டம் முழுவதும் தாழ்வான பகுதிகளில் உள்ள 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகி உள்ளனர். குலசேகரம், தடிக்காரன்கோணம், கீரிப்பாறை பகுதிகளில் உள்ள ரப்பர் தோட்டங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் ரப்பர் பால் வெட்டும் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதுவரை 55 வீடுகள் சேதம்
இதேபோல் கடந்த 1-ந் தேதி முதல் நேற்று காலை வரை பெய்த மழைக்கு மாவட்டம் முழுவதும் இதுவரை மொத்தம் 55 வீடுகள் இடிந்துள்ளன. கடந்த 3-ந் தேதி 12 வீடுகள், நேற்றுமுன்தினம் 15 வீடுகள் இடிந்துள்ளன.
அகஸ்தீஸ்வரம் தாலுகாவில் நேற்று 6 வீடுகள், கல்குளம் தாலுகாவில் 8 வீடுகள், விளவங்கோடு தாலுகாவில் 5 வீடுகள், திருவட்டார் தாலுகாவில் 4 வீடுகள் மற்றும் கிள்ளியூர் தாலுகாவில் 6 வீடுகள் என ஒரே நாளில் 29 வீடுகள் சேதமடைந்தன.
இதுமட்டுமின்றி 70-க்கும் மேற்பட்ட மரங்கள் முறிந்து விழுந்தன. 12 மின்கம்பங்கள் பகுதியாகவும், முழுமையாகவும் சேதமடைந்துள்ளன.
மழை குறைந்தது
கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்த நிலையில் நேற்று குமரியில் மழை குறைந்தது. நேற்று காலை 8 மணியுடன் 24 மணி நேர நிலவரப்படி மாவட்டத்தில் அதிகபட்சமாக மாம்பழத்துறையாறு பகுதியில் 48 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. இதேபோல மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
பேச்சிப்பாறை- 5.8, பெருஞ்சாணி- 17.2, சிற்றார் 1- 4, சிற்றார் 2- 6.2, பூதப்பாண்டி- 35.2, களியல்- 9.4, கன்னிமார்- 13.2, கொட்டாரம்- 36.4, குழித்துறை- 13.4, நாகர்கோவில்- 21.2, புத்தன்அணை- 16.6, சுருளோடு- 6.2, தக்கலை- 23, குளச்சல்- 16.4, இரணியல்- 12, பாலமோர்- 13.2, மயிலாடி- 40.4, திற்பரப்பு- 8.4, ஆரல்வாய்மொழி- 7.4, கோழிப்போர்விளை- 32.5, அடையாமடை- 17.2, குருந்தன்கோடு- 38, முள்ளங்கினாவிளை- 7.4, ஆனைக்கிடங்கு- 45.2, முக்கடல்- 12 என பதிவாகி இருந்தது.
அணைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து
எனினும் மலைப்பகுதியில் இருந்து தொடர்ந்து அணைகளுக்கு நீர்வரத்து உள்ளது. பேச்சிப்பாறை அணைக்கு வினாடிக்கு 1,747 கன அடி தண்ணீர் வந்தது. அதே சமயத்தில் அணையில் இருந்து வினாடிக்கு 278 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
பெருஞ்சாணி அணைக்கு வினாடிக்கு 1,167 கனஅடி தண்ணீர் வரத்தும், அணையில் இருந்து வினாடிக்கு 80 கனஅடி நீரும் திறந்துவிடப்பட்டுள்ளது. இதேபோல் சிற்றார்-1 அணைக்கு வினாடிக்கு 270 கன அடி நீரும், சிற்றார்-2 அணைக்கு வினாடிக்கு 99 கனஅடி தண்ணீரும் வந்தது. சிற்றார்-1 அணையில் இருந்து வினாடிக்கு 200 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. முக்கடல் அணைக்கு வினாடிக்கு 11.9 கனஅடி நீர் வரத்தும், அணையில் இருந்து வினாடிக்கு 8.6 கனஅடி நீர் குடிநீர் தேவைக்காகவும் திறந்துவிடப்பட்டுள்ளது.