சிவன் கோவில்களில் நந்திபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்


சிவன் கோவில்களில் நந்திபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்
x
தினத்தந்தி 21 Nov 2022 6:45 PM GMT (Updated: 21 Nov 2022 6:45 PM GMT)

பிரதோஷத்தையொட்டி சிவன் கோவில்களில் நந்திபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சிவகங்கை

காரைக்குடி,

பிரதோஷத்தையொட்டி சிவன் கோவில்களில் நந்திபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பிரதோஷ விழா

சிவபெருமானுக்குரிய விரதங்களில் முக்கியமானது, பிரதோஷம். இந்த விரதத்தை மேற்கொள்பவர்கள், வளர்பிறை மற்றும் தேய்பிறையில் வரும் திரயோதசி திதியில் அதிகாலையில் எழுந்து நீராடி, நித்திய கடன்களை முடிக்க வேண்டும். சிவபுராணம், சிவ நாமாவளிகளை படித்து, முடிந்தவரை மவுன விரதம் இருந்து, மாலையில் கோவில் சென்று, சிவதரிசனம் செய்யவேண்டும். அதோடு நந்திக்கு பச்சரிசி வெல்லம் படைத்து, நெய்தீபம் ஏற்றி வணங்கி வருதல் வேண்டும். பிரதோஷ விரதம் முடிந்ததும், வேதம் ஓதும் அந்தணர்களுக்கு தானம் வழங்கி விரதத்தை பூர்த்தி செய்தால் நல்ல பலனைத் தரும்.

சங்காபிஷேகம்

வளர்பிறை பிரதோஷம், தேய்பிறை பிரதோஷம் என மாதம் இருமுறை பிரதோஷம் வரும். அதன்படி நேற்று கார்த்திகை மாத பிரதோஷம் வந்தது. மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை பிரதோஷ நேரமாகும்.

பிரதோஷத்தையொட்டி சிவகங்கை மாவட்ட சிவன் கோவில்களில் நேற்று சிறப்பு பூஜை நடந்தது. முன்னதாக கார்த்திகை மாத ேசாமவாரத்தையொட்டி சிவன் கோவில்களில் சங்காபிஷேகம் நடைபெற்றது. கோவில் மண்டபத்தில் சங்குகள் அடுக்கி வைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது.

சிறப்பு அபிஷேகம்

பின்னர், மாலையில் பிரதோஷ வழிபாடு நடந்தது. திருப்புவனம் புஷ்பவனேசுவரர் கோவில், காளையார்கோவில் சொர்ணலிங்கேசுவரர் கோவில், காரைக்குடி நகர சிவன் கோவில், மானாமதுரை சோமநாதசுவாமி கோவில், பிரான்மலை கொடுங்குன்றநாதர்கோவில், சிவபுரிபட்டி சிவன் கோவில் உள்ளிட்ட பல்வேறு சிவன் கோவில்களில் நேற்று பிரதோஷ பூஜை நடந்தது. இதைெயாட்டி நந்திபெருமானுக்கும், மூலவர் சிவபெருமானுக்கும் சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கைலாசநாதர் கோவில்

எஸ்.புதூர் அருகே கரிசல்பட்டியில் உள்ள பழமையான கமலாம்பிகை சமேத கைலாசநாதர் கோவிலில் கார்த்திகை மாத முதல் திங்கட்கிழமை சோமவார பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதில் நந்தீஸ்வரர் மற்றும் கைலாசநாதருக்கு 11 வகையான சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து உற்சவர்கள் ரிஷப வாகனத்தில் உள் மண்டப பிரகாரத்தில் வலம் வந்தனர். இதேபோல் உலகம்பட்டியில் உள்ள உலகநாயகி சமேத உலகநாத சாமி கோவிலில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. மேலும் சாமிகள் ரிஷப வாகனத்தில் உள்மண்டப பிரகாரத்தில் எழுந்தருளினர். இதில் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

ஆதிதிருத்தளிநாதர் கோவில்

திருப்பத்தூர் ஆதிதிருத்தளிநாதர் கோவிலில் சோமவார முதல் திங்களை முன்னிட்டு 108 சங்காபிஷேக விழா நடைபெற்றது. இதையொட்டி மாலை 3.30 மணிக்கு யாகபூஜையுடன் நெல்லில் சங்குகள் அடுக்கப்பட்டு பால், மற்றும் சந்தனம், குங்குமம் இடப்பட்டு ரோஜாப்பூக்களுடன் சுற்றிலும் நெய்தீபம் ஏற்றி சிவலிங்க வடிவத்தில் அமைக்கப்பட்டது. பின்னர் பிரதோஷம் என்பதால் நந்தீஸ்வரருக்கு பால், தயிர் உள்ளிட்ட 16 வகை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்பு சிவாச்சாரியார்களால் சங்குகளுக்கு வில்வ இலை கொண்டு சிறப்பு அர்ச்சனை செய்தனர். தொடர்ந்து சிறப்பு கலசங்களுக்கு பூஜையும், யாகவேள்வி, பூர்ணாகுதி நடைபெற்று மூலவரான சிவனுக்கு பால், தயிர், சந்தனம், திருமஞ்சனம், இளநீர், விபூதி, யாகத்தில் வைக்கப்பட்ட புனித கலசநீர் ஆகிய பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் மூலவர் காட்சியளித்தார்.

பிரதோஷம் மற்றும் சோமவார திங்களை முன்னிட்டு பாஸ்கரகுருக்கள், ராமு குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் வேள்வி மற்றும் சிறப்பு பூஜையில் ஈடுபட்டனர். விழாவில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு நெய்விளக்கேற்றி வழிபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை ஆதிதிருத்தளிநாதர் கோவில் பிரதோஷ குழுவினர் செய்திருந்தனர்.


Related Tags :
Next Story