வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க சிறப்பு முகாம்
வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க சிறப்பு முகாம் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நடந்தது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியானது கடந்த மாதம் 1-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்பணியினை விரைவு படுத்துவதற்காகவும், வாக்காளர்களின் வசதிக்காகவும் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி தற்போது ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர்கள் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது. முகாம் நடைபெறும் இடத்திற்கு வாக்காளர்கள் தாமாக முன்வந்து படிவம்-6 பி-யில் தங்கள் ஆதார் எண்ணினை பூர்த்தி செய்து வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் கொடுத்து வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைத்து கொண்டனர். இந்த முகாம் வருகிற 2-ந்தேதியுடன் நிறைவடைகிறது. வாக்காளர்களில் சிலர் இணையதளம் மூலமாகவும் தங்களது ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைத்து வருகின்றனர்.