கண்மாய்களில் வண்டல் மண் எடுக்க சிறப்பு முகாம்கள்:'தினத்தந்தி' செய்தியை சுட்டிக்காட்டி கலெக்டரிடம் விவசாயிகள் கோரிக்கை


கண்மாய்களில் வண்டல் மண் எடுக்க சிறப்பு முகாம்கள்:தினத்தந்தி செய்தியை சுட்டிக்காட்டி கலெக்டரிடம் விவசாயிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 18 Feb 2023 12:15 AM IST (Updated: 18 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

விவசாய பயன்பாட்டுக்கு கண்மாய்களில் வண்டல் மண் எடுக்க சிறப்பு முகாம்கள் நடத்த வேண்டும் என்று ‘தினத்தந்தி' செய்தியை சுட்டிக்காட்டி குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டரிடம் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

தேனி



'தினத்தந்தி' செய்தி

தேனி மாவட்டத்தில் கண்மாய்கள், குளங்களில் வண்டல் மண் எடுப்பதற்கான அனுமதி பெற விவசாயிகள் அலைக்கழிப்பு செய்யப்படுகின்றனர். இதுகுறித்து 'தினத்தந்தி'யில் நேற்று முன்தினம் விவசாயிகளின் கருத்துகளுடன் செய்தி வெளியிடப்பட்டது.

இந்நிலையில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் ஷஜீவனா தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் விவாத பொருளாக கண்மாய்களில் விவசாயிகள் இலவசமாக வண்டல் மண் எடுத்துக் கொள்வது குறித்த தகவலும் இடம்பெற்றது. இக்கூட்டத்தில் விவசாயிகள் பேசும்போது, 'தினத்தந்தி'யில் வெளியான செய்தியை சுட்டிக்காட்டி, கண்மாய்களில் விவசாயிகள் இலவசமாக வண்டல் மண் எடுப்பதற்கு சிறப்பு முகாம்கள் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினர்.

சிறப்பு முகாம்

தேனி மாவட்ட விவசாயிகள் சங்க தலைவர் பாண்டியன் பேசும்போது, 'மண் வளம் குறைந்து வருகிறது. அதை மேம்படுத்த கண்மாய்கள், குளங்களில் இருந்து வண்டல் மண், கரம்பை மண் எடுத்து விளைநிலங்களில் கொட்டினால் மண் வளம்பெறும். ஆனால், அதற்கு எளிதில் அனுமதி பெற முடியவில்லை. கண்மாய்கள் அமைந்துள்ள பகுதிகளில் இதற்கான சிறப்பு முகாம்கள் நடத்தி, முகாமில் அரசுத்துறை அதிகாரிகளை பங்கேற்க செய்தால் விவசாயிகள் சிரமம் இன்றியும், செலவு இல்லாமலும் அனுமதி பெற முடியும். அதன் மூலம் கண்மாய்களும் ஆழப்படுத்தப்பட்டு அதிக நீர் சேமிக்க முடியும்' என்றார்.

இதே கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் கண்ணன், தமிழக தேசிய விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் சீனிராஜ் ஆகியோரும் கலெக்டரிடம் தனித்தனியாக கோரிக்கை மனு கொடுத்தனர்.

வனப்பகுதியில் தீ

மேலும் இந்த கூட்டத்தில் விவசாயிகள் பேசும்போது, "தேனி மாவட்டத்தில் துவரை உற்பத்தியை பெருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வனப்பகுதியில் தீப்பற்றி எரிவதை தடுக்க நடவடிக்கை வேண்டும். வனத்தில் தீ பிடித்தால் ஹெலிகாப்டர் மூலம் தீயை அணைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். வைகை அணையை தூர்வார வேண்டும். அகமலைக்கு செல்லும் மலைப்பாதையை சீரமைக்க வேண்டும். கூடலூர், கெங்குவார்பட்டி பகுதிகளில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும்" என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

இந்த கோரிக்கைகளுக்கு உரிய தீர்வுகள் காண சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கலெக்டர் அறிவுரை வழங்கினார். விவசாயிகளின் கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் தெரிவித்தார். கூட்டத்தில், மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் செந்தில்குமார், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) தனலட்சுமி மற்றும் அரசின் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


Related Tags :
Next Story