மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம்
வேலூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம் அடுத்த மாதம் 1-ந் தேதி முதல் ஊராட்சி ஒன்றியம் வாரியாக நடைபெறுகிறது என்று கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம் அடுத்த மாதம் 1-ந் தேதி முதல் ஊராட்சி ஒன்றியம் வாரியாக நடைபெறுகிறது என்று கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சிறப்பு மருத்துவ முகாம்
வேலூர் மாவட்டத்தில் பச்சிளங்குழந்தை முதல் 18 வயது வரையிலான மாற்றுத்திறனுடையவர்களுக்கான மருத்துவ முகாம் மற்றும் அண்ணா மறுமலர்ச்சி திட்டம் 2-ல் தேர்வு செய்யப்பட்ட 52 கிராமங்களை உள்ளடக்கி மாற்றுத்திறனாளிகள் பயனடைந்திட ஏதுவாக ஒருங்கிணைந்த சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த சிறப்பு முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்குதல், ஏற்கனவே அடையாள அட்டை பெற்றவர்களுக்கு உதவி உபகரணங்கள், அடையாள அட்டை பதிவு, மாத உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, வங்கிக்கடன், அரசு உதவிகள் பெறுவதற்கு விண்ணப்பங்கள், ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளது.
ஊராட்சி ஒன்றியம் வாரியாக...
இந்த முகாம் அடுத்த மாதம் (பிப்ரவரி) 1-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை ஊராட்சி ஒன்றியம் வாரியாக நடைபெற உள்ளது.
வேலூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பெருமுகை, கருகம்பத்தூர் ஊராட்சிகளுக்கு வருகிற 1-ந் தேதி வேலூர் அரசு முஸ்லிம் மேல்நிலைப்பள்ளியிலும்,
குடியாத்தம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ராமாலை, உள்ளி, பரதராமி, தாழையாத்தம், மோர்தானா, ராஜகுப்பம், கருநேகசமுத்திரம், பட்டு, குளிதினை, சின்னச்சேரி, சின்னதோட்டாளம் ஆகிய ஊராட்சிகளுக்கு 2-ந் தேதியன்று குடியாத்தம் அரசு நகராட்சி மேல்நிலைப்பள்ளியிலும் நடக்கிறது.
பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஏரிகுத்தி, மசிகம், கொதப்பள்ளி, எருக்கம்பட்டு, அலிஞ்சிகுப்பம் ஆகிய ஊராட்சிகளுக்கு 3-ந் தேதியன்று பேரணாம்பட்டு அரசு ஆதிதிராவிடர் நலப்பள்ளியிலும்,
கே.வி.குப்பம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட வடுகந்தாங்கல், பி.கே.புரம், செதுவாலை, விலுந்தாங்கல், கே.வி.குப்பம், வேப்பங்கனேரி, முதினம்பட்டு, கவசம்பட்டு ஆகிய ஊராட்சிகளுக்கு 4-ந் தேதி கே.வி.குப்பம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் மருத்துவ முகாம் நடக்கிறது.
ஆதார், குடும்ப அட்டை நகல்
இதேபோன்று காட்பாடி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மேல்பாடி, வேப்பாலை, கண்டிப்பேடு, தாங்கல், பெருமாள்குப்பம், கார்ணாம்பட்டு, அரும்பருதி, அம்முண்டி ஆகிய ஊராட்சிகளுக்கு 8-ந் தேதி காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், கணியம்பாடி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட வேப்பம்பட்டு, துத்திப்பட்டு, சாத்துமதுரை, சலமநத்தம், பாலாத்துவண்ணன் ஆகிய ஊராட்சிகளுக்கு வருகிற 10-ந் தேதி கணியம்பாடி அரசு மேல்நிலைப்பள்ளியிலும்,
வேலூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட அன்பூண்டி, சிறுகாஞ்சி ஊராட்சிகளுக்கு வருகிற 11-ந் தேதி தொரப்பாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியிலும், அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட வரதலாம்பட்டு, வண்டறந்தாங்கல், இறைவன்காடு, குருவராஜபாளையம், வேப்பங்குப்பம், ஆசனாம்பட்டு, அத்திக்குப்பம், அரிமலை, விரிஞ்சிபுரம், குப்பம்பட்டு, சின்னபள்ளிக்குப்பம் ஆகிய ஊராட்சிகளுக்கு வருகிற 15-ந் தேதி அணைக்கட்டு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.
மாற்றுத்திறனாளிகள் பாஸ்போர்ட்டு அளவு 4 புகைப்படம், குடும்ப அட்டை, ஆதார் அட்டை நகல் ஆகியவற்றுடன் இந்த முகாமில் பங்கேற்று பயன் அடையலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.