ஆடி அமாவாசையையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜை


ஆடி அமாவாசையையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜை
x

ஆடி அமாவாசையையொட்டி மாவட்டம் முழுவதும் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது.

திண்டுக்கல்

சடையாண்டி கோவில்

அமாவாசை நாட்களில் கோவில்களில் சிறப்பு வழிபாடு, பூஜை நடைபெறுவது வழக்கம். அதன்படி ஆடி அமாவாசை நாளான நேற்று மாவட்டம் முழுவதும் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது.

அதன்படி ஆத்தூர் அருகே அக்கரைப்பட்டியில் உள்ள சடையாண்டி கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா நடந்தது. இதையொட்டி கிடா, சேவல் பலியிட்டு அன்னதானம் வழங்கி பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர். கரடு முரடான மலைப்பாதையில் ஏறிச்சென்று குகையில் உள்ள சடையாண்டி உள்ளிட்ட 21 தெய்வங்களை பக்தர்கள் வழிபட்டனர்.

மேலும் பால் காவடி, பன்னீர் காவடி, பறவை காவடி எடுத்தும், அலகு குத்தியும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில், சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. மேலும் செம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் 150-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

கள்ளழகர் வீதி உலா

ஆடி அமாவாசையையொட்டி அணைப்பட்டி அருகே உள்ள பிள்ளையார் நத்தம் ஊராட்சி மாலப்பட்டி பெருமாள் கோவிலில் இருந்து, கள்ளழகர் குதிரை வாகனத்தில் அமர்ந்து வீதி உலா புறப்பட்டார். அதிகாலை 4 மணிக்கு வீதிஉலா தொடங்கியது.

பிள்ளையார் நத்தம், கல்கோட்டை, செக்காபட்டி, சிறுநாயக்கன்பட்டி, சொக்குப்பிள்ளைபட்டி, அணைப்பட்டி உள்ளிட்ட இடங்களில் வாணவேடிக்கையுடன் கள்ளழகர் வந்து வழிநெடுகிலும் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

மலையாள கருப்புசுவாமி கோவில்

திண்டுக்கல்-கோவிலூர் சாலையில், குளத்தூரை அடுத்துள்ள கூட்டாத்துப்பட்டியில் மலையாள கருப்புசுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு மாதமும் அமாவாசை நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று ஆடி அமாவாசையையொட்டி கருப்புசுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

அதைதொடர்ந்து கருப்புசுவாமிக்கு கிடாவெட்டி படையலிட்டு சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனைகள் நடந்தது. பின்னர் கோவில் பூசாரி மதனகோபால் ஆணிப்படுக்கையில் அமர்ந்தும், அரிவாள் மீது ஏறி நின்றும் அருள்வாக்கு கூறினார். திண்டுக்கல், மதுரை, கோவை, கரூர், நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கருப்புசுவாமியை தரிசனம் செய்ய குவிந்ததால் கோவிலில் கூட்டம் அலைமோதியது. கோவிலில் பக்தர்களுக்கு கிடா விருந்து அளிக்கப்பட்டது.

பழனி, திருமலைக்கேணி

ஆடி அமாவாசையையொட்டி பழனி பகுதியில் உள்ள கோவில்கள், சித்தர்களின் ஜீவசமாதிகளில் சிறப்பு பூஜை, வழிபாடு நடைபெற்றது. அதன்படி பழனியை அடுத்த கோதைமங்கலத்தில் உள்ள மானூர் சுவாமி கோவிலில் சிறப்பு அலங்காரம், வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணியசுவாமி கோவிலில் ஆடி மாத சர்வஅமாவாசை பூஜை நடந்தது. இதையொட்டி முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடந்தது. ராஜாங்க திருக்கோலத்தில் முருகப் பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இதில் ஏராளமான முருகபக்தர்கள் கலந்துகொண்டு நெய்விளக்கேற்றி சுவாமி தரிசனம் செய்தனர். முன்னதாக அங்குள்ள புனித தீர்த்தத்தில் பக்தர்கள் நீராடி வந்தனர். இதைத்தொடர்ந்து மாலையில் சுவாமி புறப்பாடு நடந்தது. மேலும் அருகில் உள்ள காமாட்சி மவுன குருசாமி மடத்திலும் சிறப்பு பூஜை நடந்தது.

வரசித்தி வாராகி அம்மன் கோவில்

சாணார்பட்டி ஒன்றியம் கம்பிளியம்பட்டியில் வரசித்தி வாராகி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆடி அமாவாசையையொட்டி அஸ்வாரூடா வாராகி யாகம் நேற்று நடந்தது. இதற்காக கோவில் யாகசாலையில் வைக்கப்பட்டிருந்த வாராகி கவசங்கள் மலர்களால் அலங்கரிக்கப்பட்டன. அதையடுத்து வாராகி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

அதையடுத்து யாகசாலையில் ஆடி அமாவாசை யாகம் தொடங்கப்பட்டது. யாகத்தை திண்டுக்கல்லை சேர்ந்த குமாரசாமி குருக்கள் நடத்தி வைத்தார். இதில் மதுரை, தேனி, திருச்சி, சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினர். மேலும் தங்களின் நேர்த்திக்கடனையும் செலுத்தினர். இதேபோல் வெளி மாநிலம், வெளிநாடுகளில் வசிக்கும் பக்தர்கள் இணையதளம் மூலம் யாகத்தில் பங்கேற்க கோவில் நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

யாகம் நிறைவடைந்ததும் வாராகி அறக்கட்டளை மூலம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை சஞ்சீவி சுவாமிகள், கம்பிளியம்பட்டி ஊர் பொதுமக்கள் மற்றும் திண்டுக்கல் மாவட்ட வாராகி பக்தர்கள் செய்திருந்தனர்.


Next Story