சிறப்பு வழிபாடு


சிறப்பு வழிபாடு
x

சதுர்த்தி விழாவையொட்டி தஞ்சை விநாயகர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

தஞ்சாவூர்

சதுர்த்தி விழாவையொட்டி தஞ்சை விநாயகர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

மராட்டா விநாயகருக்கு சந்தனக்காப்பு

உலக புகழ் பெற்ற தஞ்சை பெரியகோவில் மாமன்னன் ராஜராஜசோழனால் 1010-ம் ஆண்டு கட்டப்பட்டது. உலக பாரம்பரிய சின்னமாக விளங்கும் இந்த கோவில் மத்தியஅரசின் தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. பெரியகோவில் வளாகத்தில் மராட்டியர் ஆட்சியில் இரண்டாம் சரபோஜி மன்னரால் 5 அடி உயரத்தில் பிரமாண்ட தோற்றத்துடன் கூடிய விநாயகர் சிலையுடன் சன்னதி அமைக்கப்பட்டது. இது மராட்டா விநாயகர் என்று அழைக்கப்படுகிறது.

சந்தனக்காப்பு அலங்காரம்

இரண்டாம் சரபோஜி மன்னர் ஆட்சிகாலத்தில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தியன்று விநாயகருக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்து வழிபாடு நடைபெற்றது. அவருடைய காலத்திற்கு பிறகு சிறப்பு வழிபாடு மட்டுமே நடந்தது. சந்தனக்காப்பு அலங்காரம் எதுவும் நடைபெறவில்லை.

கடந்த 2018-ம் ஆண்டு முதல் விநாயகருக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மராட்டா விநாயகருக்கு பால், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.

பின்னர் 50 கிலோ சந்தனத்தை கொண்டு விநாயகருக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

இரட்டை விநாயகர்

மேலும் விநாயகருக்கு பிடித்தமான கொழுக்கட்டை, அவல், பொரி போன்றவை வைத்து படைக்கப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதேபோல் பெருவுடையார் சன்னதியின் அருகே உள்ள இரட்டை விநாயகருக்கு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரத்துடன் தீபாராதனை நடைபெற்றது. தஞ்சை வெள்ளைப்பிள்ளையார் கோவிலில் விநாயகருக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, வெள்ளி கவசத்தால் அலங்காரம் செய்யப்பட்டது. உற்சவர் விநாயகர் சிறிய சப்பரத்தில் எழுந்தருளி கோவில் வளாகத்தில் ஊர்வலமாக இழுத்து வரப்பட்டார்.

விநாயகர் கோவில்கள்

இதேபோல் தஞ்சை தொப்புள்பிள்ளையார் கோவில், தஞ்சை கவாஸ்கார தெருவில் உள்ள அழகிக்குளக்கரையில் உள்ள வலம்புரி விநாயகர் கோவில், தஞ்சை புதிய வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள வலம்புரி பாலச்சந்திர விநாயகர் கோவில், தஞ்சை ஜோதிநகர் சித்தி விநாயகர் கோவில், பண்டுஆபீஸ் சாலையில் உள்ள கற்பக விநாயகர் கோவில், மானம்புச்சாவடி விஜயமண்டபத்தெருவில் உள்ள ஜோதி விநாயகர், தெற்குவீதி கமலரத்ன விநாயகர், மேலவீதி பங்காரு காமாட்சி அம்மன் கோவிலில் உள்ள விநாயகர் மற்றும் பல்வேறு கோவில்களில் உள்ள விநாயகர் சன்னதிகளில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். கொழுக்கட்டை, பொரி, கடலை போன்றவை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.


Next Story