முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில் உடுமலை அரசு கலைக்கல்லூரி மாணவ-மாணவிகள் அசத்தல்


முதல்-அமைச்சர் கோப்பைக்கான  விளையாட்டு போட்டிகளில் உடுமலை அரசு கலைக்கல்லூரி மாணவ-மாணவிகள் அசத்தல்
x

திருப்பூரில் நடைபெற்று வரும் முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் உடுமலை அரசு கலைக்கல்லூரி மாணவ-மாணவிகள் தடகளம், சிலம்பம், இறகுப்பந்து உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் பரிசுகள் வென்று அசத்தியுள்ளனர்.

திருப்பூர்

திருப்பூரில் நடைபெற்று வரும் முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் உடுமலை அரசு கலைக்கல்லூரி மாணவ-மாணவிகள் தடகளம், சிலம்பம், இறகுப்பந்து உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் பரிசுகள் வென்று அசத்தியுள்ளனர்.

சிலம்பம்

திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற சிலம்பம் போட்டியில் உடுமலை அரசு கலைக்கல்லூரி மாணவி கணலி கலந்துகொண்டு அலங்கார வீச்சு மற்றும் சுருள் வாள் வீச்சு ஆகிய 2 பிரிவுகளிலும் முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டம் பெற்றார். மேலும் அவருக்கு பரிசுத் தொகையாக தலா ரூ.3 ஆயிரம் வழங்கப்பட்டது.

திருப்பூர் பல்நோக்கு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற இறகுப்பந்து போட்டியில், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் வருண்கார்த்திக் முதலிடத்தையும், மோகன் பிரசாத் 2 வது இடத்தையும் பிடித்தனர். பெண்கள் ஒற்றையர் பிரிவில் ஜீவதர்ஷினி 3-ம் இடம் பிடித்தார். பரிசுத் தொகையாக முதலிடத்துக்கு ரூ.3 ஆயிரம், 2-ம் இடத்துக்கு ரூ.2 ஆயிரம், 3-ம் இடத்துக்கு ரூ.1000 மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

தடகளப் போட்டிகள்

திருப்பூர், அனுப்பர்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற தடகளப் போட்டிகளில், 110 மீட்டர் தடை தாண்டு ஓட்டத்தில் கரண் மற்றும் ராமச்சந்திரன் முதல் மற்றும் 2-ம் இடம் பிடித்தனர். நீளம் தாண்டும் போட்டியில் கரண் 3-ம் இடம் பிடித்தார். குண்டு எறிதல் போட்டியில் முத்து மற்றும் சந்திர முகிலன் ஆகிய மாணவர்கள் முதல் மற்றும் 2-ம் இடத்தை பிடித்தனர்.

பெண்கள் பிரிவில் ஸ்வர்ணாஞ்சலி 3-ம் இடத்தையும் பிடித்தனர். வட்டு எறிதல் போட்டியில் ஆண்கள் பிரிவில் முத்து, வெங்கட் பாலாஜி மற்றும் சந்திர முகிலன் மூவரும் முறையே முதல் 3 இடங்களையும், பெண்கள் பிரிவில் ஸ்வர்ணாஞ்சலி 3-ம் இடத்தையும் பிடித்தனர். 400 மீட்டர் ஓட்டத்தில் சிவ சூரியா மற்றும் சுஜய் இருவரும் முதல் மற்றும் 3-ம் இடத்தைப் பிடித்தனர்.

பாராட்டு

உயரம் தாண்டுதல் போட்டியில் ஆண்கள் பிரிவில் திருபாகரன் முதலிடத்தையும், பெண்கள் பிரிவில் லட்சுமிப்பிரியா 2-ம் இடத்தையும் பிடித்தனர்.

சாதனை படைத்த மாணவ-மாணவிகளை கல்லூரி முதல்வர் கல்யாணி, உடற்கல்வி இயக்குநர் மனோகர் செந்தூர் பாண்டி, துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவ-மாணவியர்கள் பாராட்டி வாழ்த்துத் தெரிவித்தனர்.


Related Tags :
Next Story