கிராமப்புறங்களில் விளையாட்டு உள்கட்டமைப்பு வசதிகள்- முதல்-அமைச்சரிடம் வேண்டுகோள்
தமிழ்நாடு கைப்பந்து சங்க மாநில பொதுக்குழு கூட்டம் விக்கிரவாண்டியில் நடைபெற்றது.
விக்கிரவாண்டி,
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தமிழ்நாடு கைப்பந்து சங்க மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநில தலைவர் கவுதம சிகாமணி எம்.பி. தலைமை தாங்கி பேசியதாவது:-
தமிழக கைப்பந்து சங்கம் பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரால் 50 ஆண்டுகாலமாக கட்டி காக்கப்பட்டது. அவரது காலத்தில் இந்திய அளவில் மட்டுமல்லாது உலக அளவிலும் தமிழக வீரர்கள் கைப்பந்து விளையாட்டில் பங்கேற்று தமிழகத்திற்கு பெருமை தேடித் தந்தனர்.அதற்கு காரணம் பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் சிறந்த ஈடுபாடு ஆகும்.
அப்போது, தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் சிறந்த விளையாட்டு வீரர்கள் உருவாக்கப்பட்டார்கள். அதன் மூலமாக அதிகமான ஏழை குடும்பத்தை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் அரசு பணியில் வேலை வாய்ப்பு பெற்றார்கள்.கிராமப்புறங்களில் திறமையான வீரர்கள் அதிக அளவில் உள்ளனர்.
அவர்களை ஊக்குவிக்கும் வகையில் கிராமப்புறங்களில் விளையாட்டு வீரர்களுக்கு உள் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என்று தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை வைக்கிறோம்.
இவ்வாறு அவர் பேசினார்.