எஸ்.எஸ்.எல்.சி. மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
சிதம்பரம் அருகே எஸ்.எஸ்.எல்.சி. மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
அண்ணாமலை நகர்:
சிதம்பரம் அருகே கூத்தங்கோவில் கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல் மகன் விக்னேஷ் (வயது 16). சிதம்பரம் அண்ணாமலைநகரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. படித்து வந்தார். நேற்று முன்தினம் பள்ளிக்கு சென்ற விக்னேஷ் காலாண்டு தேர்வு எழுதிவிட்டு வீட்டிற்கு தாமதமாக வந்துள்ளார். இதையறிந்த பெற்றோர் ஏன் பள்ளிக்கு சென்று விட்டு தாமதமாக வருகிறாய்? என கேட்டு விக்னேசை கண்டித்துள்ளனர். இதனால் விரக்தியடைந்த விக்னேஷ் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து தனது வீட்டின் அருகே கட்டுமான பணி நடந்து கொண்டிருந்த ஒரு வீட்டில் தூக்குப்போட்டு கொண்டார். இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் விக்னேசை மீட்டு அண்ணாமலை நகர் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியில் விக்னேஷ் இறந்து விட்டார். இது குறித்து புகாரின் பேரில் அண்ணாமலை நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளிக்கு சென்று தாமதமாக வீடு திரும்பியதை பெற்றோர் கண்டித்ததால் விரக்தியடைந்த மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அக்கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.