கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேக்கம்


கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேக்கம்
x

கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேக்கமடைந்தன.

புதுக்கோட்டை

நெல் கொள்முதல் நிலையங்கள்

புதுக்கோட்டை மாவட்டத்தில் பருவ மழையை நம்பியே அதிக அளவில் விவசாயம் நடைபெறுகிறது. சமீபத்தில் சம்பா நெல் சாகுபடியில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி பயிரிட்டிருந்தனர். இதைத்தொடர்ந்து நெற்பயிர் அறுவடை கடந்த ஜனவரி மாதம் முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையொட்டி விவசாயிகளிடம் இருந்து நெல்மணிகளை கொள்முதல் செய்ய கொள்முதல் நிலையம் ஆங்காங்கே திறக்கப்பட்டது.

மாவட்டத்தில் 170-க்கும் மேற்பட்ட இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது. இதில் அந்தந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் தங்களது வயலில் அறுவடை செய்யப்பட்ட நெல் மணிகளை மூட்டையாக வாகனங்களில் கொண்டு வந்து விற்கின்றனர். சன்னரகம் 40 கிலோ சிப்பம் ரூ.864-க்கும், அதற்கு அடுத்த ரகம் ரூ.846-க்கும் கொள்முதல் செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

விவசாயிகள் வேதனை

இந்த நிலையில் நெல் கொள்முதல் நிலையங்களில் பெரும்பாலான இடங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் சேமிப்பு கிடங்குகளுக்கு அனுப்பப்படாமல் அப்படியே வைக்கப்பட்டுள்ளது. மேலும் அதன் மேல்பகுதியில் தார்ப்பாய் போட்டு மூடிய படியும், சில இடங்களில் தார்ப்பாய் போடாமலும் உள்ளது. இதனால் கொள்முதல் நிலையங்களில் உள்ள நெல் மூட்டைகளை அவ்வப்போது உடனுக்குடன் சேமிப்பு கிடங்குகளுக்கு அனுப்ப வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் திடீரென மழை பெய்தால் நெல் மூட்டைகள் வீணாகிவிடும் என்று விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். இதேபோல் நெல் கொள்முதல் நிலையங்கள் தொடர்பாக பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். இது குறித்து விவசாயிகள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு:-

பணம் வரவு வைக்கப்படுவதில் தாமதம்

கீரனூரை சேர்ந்த நடராஜன்:- அரசின் நேரடி கொள்முதல் நிலையங்கள் என்பதில், முன்பு அரசு தரப்பில் கண்காணிப்பாளர் ஒருவர் நியமிக்கப்பட்டு, விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக நெல் கொள்முதல் நிலையங்களில் முகவர் போல ஒருவர் செயல்பட்டு நெல் கொள்முதல் செய்கிறார். இவ்வாறு கொள்முதல் செய்யப்படுவதில் ஒரு நெல் மூட்டைக்கு ரூ.60 வரை பணம் கேட்கின்றனர். நெல் கொள்முதல் செய்யப்பட்ட பின் மொத்த எடை அளவு கணக்கிடப்பட்டு விவசாயிகளின் வங்கி கணக்கில் அரசு மூலம் வரவு வைக்கப்படுகிறது. இவ்வாறு பணம் வரவு வைக்கப்படுவதில் காலதாமதம் ஏற்படுகிறது. இதனை தவிர்த்து ஓரிரு நாட்களில் விவசாயிகளுக்கு பணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பல இடங்களில் நெல் மூட்டைகளை கொள்முதல் நிலைய வளாகத்தில் அப்படியே வைத்துள்ளனர். திடீரென மழை பெய்தால் மழையில் நனைந்து நெல் மூட்டைகள் வீணாகிவிடும். அதனை சேமிப்பு கிடங்குகளில் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகள் பாடுபட்டு உழைத்த நெல்மணிகள் வீணாக போவதை தடுக்க வேண்டும்.

கொள்முதல் பாதிப்பு

கறம்பவிடுதியை சேர்ந்த தங்கராசு:- விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று கொள்முதல் நிலையங்கள் கூடுதலாக திறக்கப்பட்டு உள்ளது. ஆனால் கொள்முதல் செய்த நெல்லை சேமிப்பு கிடங்குகளுக்கு கொண்டு செல்லும் பணி தாமதமாவதால் நெல் மூட்டைகள் கொள்முதல் நிலையத்திலேயே தேங்கிக்கிடக்கும் நிலை உள்ளது. நெல் மூட்டைகள் அங்கேயே இருப்பதால் கொள்முதல் பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளன. அந்த மூட்டைகள் சேமிப்பு கிடங்கிற்கு நகர்த்தப்பட்டால் தான் அடுத்த விவசாயியிடம் கொள்முதல் செய்ய முடியும். மேலும் மழை பெய்தால் நெல் மூட்டைகள் நனைந்து வீணாகும் நிலை உள்ளது. எனவே கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேங்காமல் சேமிப்பு கிடங்குகளுக்கு மாற்ற வேண்டும்.

அதிக நிதி ஒதுக்க வேண்டும்

கந்தர்வகோட்டை திருமுருகன்:- கந்தர்வகோட்டை நகரின் மைய பகுதியில் கொத்தகம் கிராமத்தில் கொள்முதல் நிலையம் அமைந்துள்ளதால் இங்கு ஏராளமான விவசாயிகள் வந்து தாங்கள் விளைவித்த நெல்லை விற்பனை செய்கிறார்கள். மேலும் இந்த கொள்முதல் நிலையம் தற்காலிக கொள்முதல் நிலையமாக இருப்பதால் இதை நிரந்தர கொள்முதல் நிலையமாக மாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மற்ற கொள்முதல் நிலையங்களில் நெல்லின் வரத்து குறைந்துவிட்டது. ஆனால் இங்கு தொடர்ச்சியாக அதிக அளவில் விவசாயிகள் வந்து தங்களது நெல்லை விற்பனை செய்கின்றனர். மேலும் இந்த நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு அதிக அளவில் நிதி ஒதுக்க வேண்டும். போதிய கோணிப்பைகளை தர வேண்டும். மழை மற்றும் வெயிலில் இருந்து நெல் மூட்டைகளை பாதுகாக்க நிரந்தர மேற்கூரைகள் அமைத்து தர வேண்டும். போதிய இடவசதி இருப்பதால் இங்கு நெல்மணிகளை கொட்டுவதற்கு தரைத்தளம் அமைத்து தர வேண்டும்.

கூடுதல் விலை

விராலிமலை அருகே உள்ள புதுப்பட்டியைச் சேர்ந்த நாகராஜ்:- நெல் மூட்டைகளை திறந்த வெளியில் தார்ப்பாய் கொண்டு மூடி பாதுகாப்பற்ற முறையில் வைத்துள்ளனர். மழை பெய்தால் நெல்மூட்டைகள் நனைந்து பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு விடுகிறது. கடந்த முறை கொள்முதல் நிலையங்களில் இருந்த நெல் மூட்டைகள் நனைந்ததால் விவசாயிகளாகிய நாங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டோம். இதனால் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கென தரமான கட்டிடங்களை அமைத்து தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு தற்போது நெல் மூட்டைகளுக்கு நிர்ணயிக்கும் விலையை விட கூடுதல் விலை நிர்ணயம் செய்தால் நன்றாக இருக்கும்.


Next Story