மாநில அளவிலான ஐவர் கால்பந்து போட்டி: திருச்சி ஜோசப் அணி சாம்பியன்


மாநில அளவிலான ஐவர் கால்பந்து போட்டி: திருச்சி ஜோசப் அணி சாம்பியன்
x

மாநில அளவிலான ஐவர் கால்பந்து போட்டியில் திருச்சி ஜோசப் அணி சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது.

திருச்சி

மாநில அளவிலான கால்பந்து போட்டி

கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி திருச்சி உறையூர் போலீஸ் மைதானத்தில் எப்.சி. உறையூர் சார்பில் 2-ம் ஆண்டு மாநில அளவிலான மின்னொளி ஐவர் கால்பந்து போட்டி கடந்த 14-ந்தேதி தொடங்கி 3 நாட்கள் நடைபெற்றது. போட்டியில் கேரளா, பெங்களூரு, திருச்சி, தேனி, மதுரை, தஞ்சை, திண்டுக்கல், புதுக்கோட்டை, சென்னை, வால்பாறை, திருப்பூர், சேலம், சிவகங்கை, கோவை, மேட்டுப்பாளையம், ஊட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து மொத்தம் 36 அணிகள் கலந்து கொண்டன.

இந்த போட்டியில் `ஏ' பிரிவில் 18 அணிகளும், `பி' பிரிவில் 18 அணிகளும் கலந்து கொண்டு விளையாடின. இந்த போட்டி நாக் அவுட் முறையில் நடைபெற்றது.

திருச்சி ஜோசப் அணி வெற்றி

பல்வேறு கட்டங்களாக நடைபெற்ற இந்த போட்டியில் சென்னை ஜேபியார் அணியும், திருச்சி ஜோசப் அணியும் நேற்று இறுதி போட்டியில் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் திருச்சி ஜோசப் அணி 5-வது நிமிடத்தில் 1 கோல் அடித்தது. பின்னர் சென்னை ஜேபியார் அணி வீரர்கள் கோல் போடுவதற்கு தொடர்ந்து முயற்சித்தனர். ஆனாலும் திருச்சி ஜோசப் அணி வீரர்கள் தடுப்பாட்டம் ஆடி விளையாடினர். ஆட்டம் முடிவடையும் கடைசி நேரத்தில் சென்னை ஜேபியார் அணி 1 கோல் அடித்தது. இதனால் 1-1 என்ற கோல் கணக்கில் ஆட்டம் சமநிலையானது.

பின்னர் பெனால்டி சூட்அவுட் முறையில் 3-2 என்ற கோல் கணக்கில் திருச்சி ஜோசப் அணி வெற்றி பெற்றது. இதையடுத்து பரிசளிப்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு திருச்சி ஜோசப் அணி வீரர்களுக்கு பரிசுக் கோப்பையும் ரூ.50 ஆயிரம் பரிசு தொகையையும் வழங்கினார். 2-வது இடம் பிடித்த சென்னை ஜேபியார் அணிக்கு கோப்பையும், ரூ.30 ஆயிரம் பரிசு தொகையும் வழங்கப்பட்டது.


Next Story