பழமை வாய்ந்த 2 உலோக சிலைகளை ரூ.2 கோடிக்கு விற்க முயன்ற வாலிபர்


பழமை வாய்ந்த 2 உலோக சிலைகளை ரூ.2 கோடிக்கு விற்க முயன்ற வாலிபர்
x

திருக்கடையூர் அருகே பழமை வாய்ந்த 2 உலோக சிலைகளை ரூ.2 கோடிக்கு விற்க முயன்ற வாலிபரை, வியாபாரிபோல் நடித்து போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.

தஞ்சாவூர்

கும்பகோணம்:-

திருக்கடையூர் அருகே பழமை வாய்ந்த 2 உலோக சிலைகளை ரூ.2 கோடிக்கு விற்க முயன்ற வாலிபரை, வியாபாரிபோல் நடித்து போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.

சாமி சிலைகள்

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூர் அருகே உள்ள டி.மணல்மேடு கிராமத்தில் பழமையான 2 உலோக சாமி சிலைகள் வெளிநாட்டுக்கு கடத்தி செல்வதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் டி.ஜி.பி. ஜெயந்த் முரளி உத்தரவின் பேரில் ஐ.ஜி. தினகரன் வழிகாட்டுதலின்படி கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் சின்னதுரை மற்றும் போலீசார் மதிக்குமார், கோபால், குமாரராஜா, ஜெகதீஷ், ராம்குமார், பிரவீன்செல்வக்குமார் ஆகியோர் அடங்கிய குழுவினர் சிலகைளை வாங்கும் வியாபாரிகள் போல் மாறு வேடத்தில் அங்கு சென்றனர்.

அங்கு சென்ற போலீசார், சிலைகளை பதுக்கி வைத்திருந்த நபரிடம் சிலைகளை வாங்க இருப்பதாக கூறி பேச்சுவார்த்தை நடத்தினர்.

விலை ரூ.2 கோடி

அப்போது அந்த நபர், 2 உலோக சிலைகளையும் ரூ.2 கோடிக்கு விற்பனை செய்ய விலை பேசினார். அவரிடம் மாறு வேடத்தில் இருந்த போலீசார் சாதுர்யமாக பேச்சுக்கொடுத்து அவரை நம்ப செய்து சிலைகளை கொண்டு வர வைத்தனர்.

இதை உண்மை என்று நம்பிய அந்த நபர் சிலைகளை கொண்டு வந்து காண்பித்தார். உடனே போலீசார் கோழியை அமுக்குவதுபோன்று அந்த நபரை மடக்கிப்பிடித்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில் அவர் டி.மணல்மேடு ரோட்டு தெருவை சேர்ந்த சுரேஷ்(வயது 32) என்பது தெரிய வந்தது. மேலும் அவர் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த உலோக சிலைகள் புத்தமத பெண் கடவுள் மற்றும் அமர்ந்த நிலையில் உள்ள விநாயகர் என்பதும் தெரிய வந்தது.

700 ஆண்டுகள் பழமை

இதையடுத்து அந்த சிலைகளை கைப்பற்றிய சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சிலைகளை சென்னையில் உள்ள சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் ஒப்படைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸ் இன்ஸ்பெக்டர் இந்திரா மற்றும் போலீசார் சிலைகளை பதுக்கி வைத்திருந்த சுரேஷை கைது செய்தனர்.

கைப்பற்றப்பட்ட சிலைகளில் ஒன்று புத்தமத கடவுளான அபலோகிதேஸ்வராவின் மனைவி தாராதேவியின் சிலை ஆகும். இவரை திபெத் நாட்டில் காக்கும் கடவுளாக மக்கள் வழிபாடுகிறார்கள். இந்த சிலை 700 ஆண்டுகள் பழமையானது என்றும், விநாயகர் சிலை 300 ஆண்டுகள் பழமையானது என்றும் தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.


Next Story