விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்: தமிழக அரசுக்கு, எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்


விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்: தமிழக அரசுக்கு, எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
x

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசை, எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

சென்னை,

தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின், அவரது கட்சியினரிடம் வாக்காளர்களை சேர்த்தல்-நீக்கல் உள்ளிட்ட பணிகளைப் பற்றி பேசுவதில் எனக்கு ஆட்சேபனையில்லை. ஆனால், எதைப் பற்றி பேச வேண்டுமோ, அதைப் பற்றி பேசாமல், அவருடைய பேச்சில், பாதிக்கும் மேல் என்னைப் பற்றி பேசியதில் இருந்தே, அவருக்கு தோல்வி பயம் ஏற்பட்டுள்ளது என்பது நன்கு விளங்குகிறது.

அ.தி.மு.க. அரசில் தொடங்கப்பட்ட அம்மா மினி கிளினிக், அம்மா இருசக்கர வாகன மானியம், பெண்களுக்கு தாலிக்குத் தங்கம் மற்றும் திருமண நிதியுதவித் திட்டம், மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டம் போன்ற பல்வேறு மக்கள் நலத் திட்டங்களுக்கு மூடுவிழா செய்தும், மாநில நிதியில் செயல்படுத்தப்பட்ட அத்திக்கடவு - அவினாசி திட்டம் உள்பட ஓராண்டுக்குள் நிறைவேற்றி இருக்கக்கூடிய பல திட்டங்களுக்கு போதிய நிதி ஒதுக்காமல் இன்றுவரை இழுத்தடித்து கொண்டிருப்பது என்று தமிழக மக்களிடையே பெரும் வெறுப்பை சம்பாதித்து கொண்டிருக்கிறார் மு.க.ஸ்டாலின்.

அதிகார துஷ்பிரயோகங்கள்

ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் இருமுறை மின் கட்டண உயர்வு, சொத்து வரி மற்றும் வீட்டுவரி உயர்வு, குடிநீர் மற்றும் கழிவு நீர் கட்டண உயர்வு, பால் பொருட்கள் விலை உயர்வு, அரசின் அனைத்துக் கட்டணங்களும் பல மடங்கு உயர்வு, நில வழிகாட்டி மதிப்பு உயர்வு, பத்திரப்பதிவு கட்டணம் உயர்வு, மோட்டார் வாகன வரி உயர்வு என்று தமிழக மக்கள் அனைவரது தினசரி வாழ்வையே புரட்டிப் போட்ட நிர்வாகத் திறனற்ற 29 மாத கால தி.மு.க. ஆட்சியில் நிர்வாக ரீதியாக படுதோல்வியை சந்தித்து மக்களின் வெறுப்புக்கு உள்ளாகி இருக்கிறது. இதற்கு மு.க.ஸ்டாலினின் பதில் என்ன?

சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, அதிகரித்து வரும் போதை கலாசாரம், போதைப்பொருள் விற்பனை, பொது வெளியில் கொடூர ஆயுதங்களால் கொலை செய்தல்; வழிப்பறி; நகை பறிப்பு, தி.மு.க. நிர்வாகிகள் காவல் துறையினரை மிரட்டுதல் மற்றும் அதிகார துஷ்பிரயோகங்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் தொழில் துறையினரை மிரட்டும் வீடியோக்கள், நில அபகரிப்பு, அன்றாடம் நடைபெறும் சம்பவங்கள் ஆகி விட்டது.

சர்வாதிகாரியாக மாறாதது ஏன்?

பா.ஜ.க.விடம் தமிழ்நாட்டின் உரிமைகளை அ.தி.மு.க. அடகு வைத்துள்ளதாக பேசியுள்ளார். ஆனால், 1999-ம் ஆண்டு, ஆட்சி அதிகாரத்திற்காக 5 ஆண்டுகள் பா.ஜ.க-வின் அடிமையாக தி.மு.க.தான் இருந்துள்ளது. மேலும், 2006 முதல் 2011 வரை தமிழகத்தில் தி.மு.க. அரசு, ஆட்சி அதிகாரத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு எதிராகவும், மருத்துவப் படிப்பிற்கான நீட் நுழைவுத் தேர்வுக்கு அச்சாரமிட்டதை மு.க.ஸ்டாலின் மறந்துவிட்டாரா?

தி.மு.க. நிர்வாகிகளின் எல்லை மீறிய தவறுகள் வெளிச்சத்துக்கு வந்தபோது, தவறு செய்யும் தி.மு.க. நிர்வாகிகள் மீது சர்வாதிகாரியாக மாறி நடவடிக்கை எடுப்பேன் என்று மு.க.ஸ்டாலின் சினிமா வசனம் பேசி 18 மாதங்களுக்கு மேல் ஆகிறது. தொடர்ந்து தி.மு.க. நிர்வாகிகளின் மக்கள் விரோதச் செயல்கள், அதிகார அத்துமீறல்கள் நடந்துகொண்டுதான் உள்ளது. ஆனால், மு.க.ஸ்டாலின் இன்னும் சர்வாதிகாரியாக மாறவில்லை.

பொய் பிரசாரத்தை நிறுத்திவிட்டு...

தான் வகிப்பது பெருமைமிக்க முதல்-அமைச்சர் பதவி என்பதை மறந்து, என் மீதும், அ.தி.மு.க. மீதும் பாய்ந்து பிறாண்டியிருப்பது, 'அரண்டவன் கண்ணுக்கு இருண்டது எல்லாம் பேய்' என்ற பழமொழியை நிரூபிப்பதாக உள்ளது. இனியாவது மு.க.ஸ்டாலின் பொய் பிரசாரத்தை நிறுத்திவிட்டு, தமிழக மக்களுக்கு பயனளிக்கும் வகையில் நல்ல திட்டங்களை செயல்படுத்தவும், விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story