வந்தே பாரத் ரெயில் மீது கல் வீசியதில் கண்ணாடி உடைந்தது


வந்தே பாரத் ரெயில் மீது கல் வீசியதில் கண்ணாடி உடைந்தது
x

வாணியம்பாடி அருகே வந்தேபாரத் ரெயில் மீது கல்வீசி தாக்கப்பட்டதில் கண்ணாடி உடைந்தது. இதுகுறித்து வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பத்தூர்

வாணியம்பாடி அருகே வந்தேபாரத் ரெயில் மீது கல்வீசி தாக்கப்பட்டதில் கண்ணாடி உடைந்தது. இதுகுறித்து வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில்

சென்னை சென்ட்ரலில் இருந்து கர்நாடகா மாநிலம் மைசூர் வரை செல்லும் வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயிலை கடந்த நவம்பர் மாதம் 11-ந்தேதி பிரதமர் மோடி பெங்களூரு ரெயில் நிலையத்தில் நடந்த விழாவில் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

அதன்பிறகு வாரந்தோறும் புதன்கிழமை தவிர அனைத்து நாட்களிலும் இந்த ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று காலை 5.50 மணியளவில் சென்னையில் இருந்து மைசூருவுக்கு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டது.

அந்த ரெயில் காட்பாடி ரெயில் நிலையத்துக்கு 7.25 மணியளவில் வந்தடைந்தது. அதன்பிறகு பெங்களூரு நோக்கி புறப்பட்டது. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியில் உள்ள புதூர் அருகே காலை 8.13 மணியளவில் சென்ற போது திடீரென யாரோ ஒருவர் கல் வீசிவிட்டு ஓடினார்.

இதனால் ரெயில் பெட்டி கண்ணாடி உடைந்தது. அப்போது ரெயிலில் இருந்த பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். எனினும் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

புகார்

இந்த ரெயில் காட்பாடியை அடுத்த பெங்களூருவில் தான் நிற்கும் என்பதால் ரெயில் பெங்களூரு சென்றதும் ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் நிலையத்தில் என்ஜின் டிரைவர் புகார் கொடுத்தார். அதன்பேரில் பெங்களூரு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். சம்பவம் நடந்த இடம் வாணியம்பாடி அருகே இருப்பதால் புகார் மனுவை ஜோலார்பேட்டை ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து ஜோலார்பேட்டை ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் வழக்குப்பதிவு செய்து ரெயில் மீது கல் வீசி தாக்கிய வாணியம்பாடி அருகே திருமாஞ்சோலை பகுதியைச் சேர்ந்த மகேந்திரன் என்பவரது மகன் குபேந்திரன் (வயது 21) என்பவரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

வாணியம்பாடி ரெயில் நிலையம் அருகே ஓடும் ரெயில் மீது கல் வீசிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story