விட்டு, விட்டு மழை
கொள்ளிடம் சுற்றுவட்டார பகுதிகளில் விட்டு, விட்டு மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்
கொள்ளிடம்:
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் சுற்றுவட்டார பகுதியான பழையாறு, புதுப்பட்டினம், தாண்டவன்குளம், பழையபாளையம், எடமணல், வேட்டங்குடி, கடவாசல்,திருக்கருகாவூர், குன்னம், மாதிரவேளூர், அகரஎலத்தூர், வடரங்கம், உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராம பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக விட்டு விட்டு மழை பெய்து வந்தது. மேலும் ஒரு சில நேரங்களில் கடுமையான வெயில் தாக்கம் இருந்தாலும் குளிர்ச்சியான காலநிலை நிலவியது. மேக கூட்டங்கள் ஒவ்வொரு பகுதியாக திரண்டு வந்து மழை பொழிந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில் கடந்த சில நாட்களாக கோடை வெப்பம் அதிகரித்து காணப்பட்டது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்பு அடைந்தது. கடந்த மூன்று நாட்களாக விட்டுவிட்டு பரவலாக பெய்து வரும் மழையினால் குறுவை சாகுபடி மற்றும் பருத்தி சாகுபடி, எள் சாகுபடிசெய்த பயிர்களுக்கு ஏதுவாக அமைந்துள்ளது. இந்த மழையினால் ஒரு சில இடங்களில் செங்கல் சூளைகள் போடப்பட்ட பகுதிகளில் செங்கல் தயாரிக்கும் பணி பாதிக்கப்பட்டு உள்ளது.