ஆபாச வீடியோ, புகைப்படம் வெளியிடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை


ஆபாச வீடியோ, புகைப்படம் வெளியிடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை
x

சமூக வலைத்தளங்களில் பெண்களை பற்றி ஆபாச வீடியோ, புகைப்படம் வெளியிடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல்பாண்டியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வேலூர்

சமூக வலைத்தளங்களில் பெண்களை பற்றி ஆபாச வீடியோ, புகைப்படம் வெளியிடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல்பாண்டியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வன்முறை ஒழிப்பு பிரசாரம்

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் வேலூர் மாவட்டம் சார்பில் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு பிரசாரம் மற்றும் ஆலோசனை கூட்டம் வேலூர் டவுன் ஹாலில் நடந்தது. ப.கார்த்திகேயன் எம்.எல்.ஏ., மேயர் சுஜாதா, போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குனர் செந்தில்குமரன் வரவேற்றார்.

கூட்டத்துக்கு வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தலைமை தாங்கி பேசியதாவது:-

சமூகத்தில் பெண்களுக்கு எதிராக பல்வேறு வன்முறைகள் தினமும் நடக்கின்றன. குடும்ப தகராறில் தாக்குதல், பாலியல் துன்புறுத்தல், வரதட்சணை கொடுமை உள்பட பல்வேறு இன்னல்களுக்கு பெண்கள் ஆளாகின்றனர். பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தடுக்கப்பட வேண்டும். இதுதொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பெண்குழந்தைகளை திருமணம் செய்து கொடுக்க அதிக பணம் செலவாகும் என்று பெண் சிசுக்கொலை முன்பு நடந்தன. திருமணத்துக்கு பின்னரும் பெண்கள் வரதட்சணை கேட்டு கொடுமைக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.

ஆபாச வீடியோ, புகைப்படம்

பள்ளி, கல்லூரிகள், பணிபுரியும் இடங்கள், பொதுஇடங்களில் பெண்கள் பாலியல் சீண்டல்களுக்கு ஆளாகின்றனர். சமூக வலைத்தளங்களில் பெண்களை பற்றி தவறாகவும், ஆபாசமாகவும், வீடியோக்கள், புகைப்படங்கள் பதிவிடப்பட்டு வருகிறது. இவை தவிர்க்கப்பட வேண்டும். சமூக வலைத்தளங்களில் தவறாக பதிவிட்டிருந்தால் பெண்கள் தைரியமாக புகார் அளிக்க வேண்டும். அதன்மீது காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுப்பார்கள். சமூக வலைத்தளங்களில் ஆபாச வீடியோ, புகைப்படம் வெளியிடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வேலூர் மாவட்டத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடைபெறாமல் இருக்க அனைவரின் ஒத்துழைப்பும் தேவை.

இவ்வாறு அவர் பேசினார்.

விழிப்புணர்வு ஊர்வலம்

அதைத்தொடர்ந்து பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தின விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் குமாரவேல்பாண்டியன், ப.கார்த்திகேயன் எம்.எல்.ஏ., மேயர் சுஜாதா ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். டவுன்ஹாலில் இருந்து ஊர்வலம் புறப்பட்டு அண்ணாசாலை, பழைய மீன்மார்க்கெட் சிக்னல், கோட்டை காந்திசிலை, மக்கான் சிக்னல் வழியாக மீண்டும் டவுன்ஹாலை வந்தடைந்தது. இதில், மகளிர் சுய உதவிக்குழுவினர் குழந்தை திருமணத்தை ஒழிப்போம், பெண் உரிமைகளை பாதுகாப்போம் உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இதில், வேலூர் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆர்த்தி, வக்கீல் சுமதி மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஊரக வாழ்வாதார இயக்க உதவி திட்ட அலுவலர் கலைச்செல்வன் நன்றி கூறினார்.


Next Story