பாலில் கலப்படம், எடை குறைவு கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை:கலெக்டர்


தூத்துக்குடி மாவட்டத்தில் பாலில் கலப்படம், எடை குறைவு கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் செந்தில்ராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் பாலில் கலப்படம், எடையளவு குறைவு கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்து உள்ளார்.

ஆய்வு கூட்டம்

தூத்துக்குடி மாவட்டத்தில் பால் உற்பத்தி மற்றும் விற்பனையில் நடைபெறும் கலப்படம், எடையளவு குறைவு உள்ளிட்ட பல்வேறு மோசடிகளைக் கண்காணித்து, அதனை தடுத்து உரிய சட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கி பேசினார்.

கண்காணிப்பு குழு

அப்போது, பால், பச்சிளம் குழந்தைகள் தொடங்கி பெரியோர் வரை தேவையான அதிமுக்கியமான உணவு ஆகும். நமது மாவட்டத்தில் சுமார் 1 லட்சம் லிட்டர் பால் உற்பத்தியாகிறது. பால் உற்பத்தி மற்றும் விற்பனையில் ஆங்காங்கே சில இடங்களில் தண்ணீர் கலப்படமும், அளவில் மோசடியும் நடந்து கொண்டிருப்பதாக தகவல் வருகிறது. எனவே, இது போன்ற மோசடிகளைத் தடுக்க உணவு பாதுகாப்புத் துறையின் மாவட்ட நியமன அலுவலர் ஒருங்கிணைப்பில், உணவு பாதுகாப்புத் துறை, தொழிலாளர் நலத்துறை, பால் வளத்துறை அலுவலர்கள் அடங்கிய கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழு வருகிற 8-ந் தேதி முதல் திடீர் ஆய்வுகள் மேற்கொள்ள உள்ளனர். அவர்கள் தவறு நடைபெறுவதை உறுதி செய்யும் பட்சத்தில், அவரவர் துறை சார்ந்த நடவடிக்கை எடுப்பார்கள்.

உணவு பாதுகாப்புத் துறையானது உணவு மாதிரி எடுக்கும் பணி தவிர, நியமன அலுவலர் மூலமாக ரூ.10 ஆயிரம் வரை அபராதம் விதித்தல் அல்லது மாவட்ட வருவாய் அலுவலர் மூலம் ரூ.25 ஆயிரம் வரை அபராதம் விதித்தல் உள்ளிட்ட நடவடிக்கை எடுப்பார்கள். உணவு மாதிரி எடுத்து பகுப்பாய்வில் தரம் குறைவான பால் என்று கண்டறியப்பட்டால் மாவட்ட வருவாய் அலுவலர் நீதிமன்றத்தில் ரூ.5 லட்சம் வரை அபராதம் விதிக்க வாய்ப்பு உள்ளது. எடையளவில் மோசடி கண்டறிந்தால் தொழிலாளர் நலத்துறையின் உதவி ஆணையர் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை அபராதம் விதித்தல் உள்ளிட்ட நடவடிக்கை எடுப்பார்கள். கலப்படம் அல்லது எடையளவில் மோசடி செய்யும் பால் உற்பத்தியாளர்கள் அல்லது விற்பனையாளர்களை பால் சொசைட்டியில் இருந்து நீக்கும் நடவடிக்கையை பால் வளத்துறை மேற்கொள்ளும்.

பாதுகாப்பான பால்

எனவே, பால் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் தங்களது தவறை திருத்திக்கொண்டு நுகர்வோர்களுக்கு பாதுகாப்பான பால் வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நுகர்வோர்கள் பால் கலப்படம் குறித்து புகார் அளிக்க விரும்பினால் 94440 42322 என்ற உணவு பாதுகாப்புத் துறையின் எண்ணுக்கோ அல்லது 86808 00900 என்ற கால் யுவர் கலெக்டர் எண்ணுக்கோ புகார் அளிக்கலாம் என்று கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் மாரியப்பன், தொழிலாளர் துறை உதவி ஆணையர் (அமலாக்கம்) க.திருவள்ளுவன், பால் வளத்துறை துணை பதிவாளர் நவராஜ் மற்றும் தூத்துக்குடி ஆவின் பொது மேலாளர் ராஜகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story