பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடமாற்றத்தை கண்டித்து மாணவர்கள், பெற்றோர்கள் சாலை மறியல்
பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடமாற்றத்தை கண்டித்து மாணவர்கள், பெற்றோர்கள் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.
மீஞ்சூர் அடுத்த தத்தைமஞ்சி கிராமத்தில் அரசு நடுநிலைப் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 80-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கல்வி பயின்று வரும் நிலையில் அங்கு படிக்கும் பழங்குடியின மாணவர்ளிடம் தலைமை ஆசிரியர் பாகுபாடு காட்டுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து பள்ளி தலைமை ஆசிரியர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
இதற்கு மற்ற தரப்பு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்து தத்தைமஞ்சி கிராமத்தில் உள்ள நெடுஞ்சாலையில் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தின் போது மாற்றம் செய்யப்பட்ட தலைமை ஆசிரியரை மீண்டும் பள்ளிக்கு அழைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கை பதாகைகளை கையில் ஏந்தி மாணவர்கள் கோஷம் போட்டனர். தகவல் அறிந்த பொன்னேரி சப்-கலெக்டர் ஐஸ்வர்யாராமநாதன், தாசில்தார் செல்வகுமார் மற்றும் காட்டூர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.