அரசு டவுன் பஸ்சை சிறைபிடித்து மாணவர்கள் போராட்டம்


அரசு டவுன் பஸ்சை சிறைபிடித்து மாணவர்கள் போராட்டம்
x

கறம்பக்குடி அருகே கூடுதல் பஸ் இயக்கக்கோரி அரசு டவுன் பஸ்சை மாணவர்கள் சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை

அரசு பஸ்

கறம்பக்குடி அருகே உள்ள துவாரில் இருந்து புதுக்கோட்டைக்கு அரசு டவுன் பஸ் இயக்கப்படுகிறது. இந்த பஸ்சில் மழையூர் அரசு மேல்நிலைப்பள்ளி, செம்பட்டுவிடுதி, வடவாளம், மாத்தூர் மற்றும் புதுக்கோட்டை அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் 100-க்கும் மேற்பட்டோர் தினமும் பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று வருகின்றனர்.

காலை மற்றும் மாலை வேளையில் இந்த ஒரு டவுன் பஸ் மட்டுமே இயக்கப்படுவதால் கட்டுகடங்காத கூட்டத்துடன் பஸ் படிக்கட்டுகளில் தொங்கியபடியே மாணவர்கள் பஸ்சில் பயணம் செய்து வருகின்றனர்.

சிறைபிடிப்பு

இந்தநிலையில் நேற்று காலை 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பஸ்சில் சென்று கொண்டிருந்தனர். அதில் சில மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியபடியே சென்றனர். கெண்டையன்பட்டி பஸ் நிறுத்தம் அருகே சென்ற போது மேலும் சில மாணவர்கள் பஸ்சில் ஏற முயன்றனர். ஆனால் பஸ்சின் கண்டக்டர் படிக்கட்டுகளில் தொடர்ந்து பயணம் செய்ய மாணவர்களை அனுமதிக்கவில்லை. இதனால் மாணவர்களுக்கும் கண்டக்டருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதையடுத்து மாணவர்கள் அந்த பஸ்சை இயக்க விடாமல் சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த மழையூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது கூடுதல் பஸ் இயக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து சிறை பிடித்த அரசு டவுன் பஸ்சை மாணவர் விடுவித்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story