மாணவி உயிரிழந்த விவகாரம்: குற்றவாளிகள் யாராக இருந்தாலும் சட்டரீதியான நடவடிக்கை அமைச்சர் உறுதி


மாணவி உயிரிழந்த விவகாரம்: குற்றவாளிகள் யாராக இருந்தாலும் சட்டரீதியான நடவடிக்கை அமைச்சர் உறுதி
x

கள்ளக்குறிச்சி, சின்னசேலம் தனியார் பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரத்தில் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.

சென்னை,

கள்ளக்குறிச்சி, சின்னசேலம் தனியார் பள்ளி போராட்டக்காரர்களால் சூறையாடப்பட்டது. இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

பள்ளியில் மாணவர்களின் மாற்று சான்றிதழ், பிறப்பு சான்றிதழ் உள்பட பல சான்றிதழ்கள் எரிந்து இருக்கின்றன. சான்றிதழ்கள் எரிந்ததை பலர் அழுதபடி எங்களிடம் காட்டினர். வருவாய்த்துறை மூலம் மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்க ஏற்பாடு செய்து கொடுக்க உள்ளோம். அந்த பள்ளி மாணவர்களுக்கு கற்றல் இடைவெளி ஏற்படாத வகையில் மாற்று ஏற்பாடுகளை முதல்-அமைச்சரிடம் சொல்லி செய்வோம். அந்த பள்ளி மாணவி இறந்த 24 மணி நேரத்துக்குள் துறைரீதியான விளக்கம் மாவட்ட கலெக்டருக்கு வழங்கப்பட்டுவிட்டது.

மாணவி மரணம் தொடர்பாக தனியாக குழு அமைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் அறிவித்துள்ளார். அதன்படி குழு அமைக்கப்பட்டு சட்டரீதியாக இந்த விசாரணை நடத்தப்படும்.

சட்டரீதியாக நடவடிக்கை

இந்த விஷயத்தில் அரசியல் செய்யவேண்டும் என்று யாரும் விரும்பவில்லை. முதல்-அமைச்சர் தொடங்கி அனைவரும் இதில் முறையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றுதான் விரும்புகின்றனர். மாணவியின் பெற்றோர் தொடங்கி அனைவரும் எதிர்பார்ப்பது போல, இந்த சம்பவம் முறையாக விசாரிக்கப்பட்டு, குற்றவாளிகள் யாராக இருந்தாலும் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு சான்றிதழ் சரிபார்ப்பில் வெளி மாநிலத்தவர்களை பங்கேற்றிருப்பதை கண்டறிந்து நீக்கப்படுவார்கள். வரும் காலங்களில் ஆசிரியர் தேர்வு வாரிய தேர்வுகளுக்கும் கட்டாய தமிழ்த்தாள் என்ற நடைமுறையை கொண்டு வருவதற்கான அரசாணை விரைவில் பிறப்பிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story