போக்குவரத்தை சரிசெய்தபோது பரிதாபம்: வேன் மோதி சப்-இன்ஸ்பெக்டர், போலீஸ்காரர் பலி


போக்குவரத்தை சரிசெய்தபோது பரிதாபம்: வேன் மோதி சப்-இன்ஸ்பெக்டர், போலீஸ்காரர் பலி
x

ராசிபுரம் அருகே போக்குவரத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்ட சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர், போலீஸ்காரர் ஆகியோர் சுற்றுலா வேன் மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தனர்.

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே மதுரை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் புதுச்சத்திரம் ஏ.கே.சமுத்திரம் பகுதியில் புதிய மேம்பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. அதையொட்டி இணைப்பு சாலை அமைக்கப்பட்டு, அதன் வழியாக வாகன போக்குவரத்து நடந்தது.

இந்த நிலையில் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்களை இணைப்புச் சாலைக்கு திசைதிருப்புவதற்காக சிறிய இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தன. நேற்றுமுன்தினம் நள்ளிரவு 12 மணி அளவில் நெல்லையில் இருந்து ஓசூருக்கு சென்ற கார், சிறிய இரும்பு தடுப்புகள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. பின்னர் நள்ளிரவு 1.30 மணியளவில் அந்த வழியாக சென்ற லாரி ஒன்று, அங்குள்ள மண்திட்டின் மீது ஏறி போக்குவரத்துக்கு இடையூறாக நின்றது. இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த ராசிபுரம் மற்றும் புதுச்சத்திரம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கார் மற்றும் லாரியை மீட்டு, போக்குவரத்தை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.

2 பேர் பலி

இதனிடையே திருநாள்ளாரில் இருந்து சேலம் மாவட்டம் இளம்பிள்ளை நோக்கி சென்ற சுற்றுலா வேன் திடீரென்று, போக்குவரத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த புதுச்சத்திரம் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் (வயது 55), ராசிபுரம் போலீஸ்காரர் தேவராஜன் (37) ஆகியோர் மீது மோதியது. பின்னர் அந்த வேன், லாரி மீது மோதி நின்றது. இதில் வேனின் முன்பகுதி அப்பளம் போல நொறுங்கியது.

இந்த விபத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகர், போலீஸ்காரர் தேவராஜன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இதில் சம்பவ இடத்திலேயே தேவராஜன் பரிதாபமாக இறந்தார். உடனே அக்கம்பக்கத்தினர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.

5 பேர் படுகாயம்

அதேபோல் இந்த விபத்தில் மற்றொரு போலீஸ்காரர் மணிகண்டன் மற்றும் சுற்றுலா வேனில் பயணம் செய்த சேலம் கோனேரிப்பட்டியை சேர்ந்த 5 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்கள் 5 பேரும் ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்து தொடர்பாக புதுச்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story