சொட்டு நீர் பாசனம் அமைக்க மானியம்


சொட்டு நீர் பாசனம் அமைக்க மானியம்
x

திருப்பத்தூர் மாவட்டத்தில் சொட்டு நீர் பாசனம் அமைக்க தோட்டக்கலைத்துறை சார்பில் மானியம் வழங்கப்படுவதாக கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.

திருப்பத்தூர்

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சொட்டுநீர் பாசனத்துக்கு மானியம்

திருப்பத்தூர் மவாட்டத்தில் 2023-24-ம் நிதி ஆண்டிற்கு 1,400 ஏக்கரில் தோட்டக்கலை பயிர்களுக்கு சொட்டு நீர் பாசனம் அமைக்க இலக்கு நிர்ணயிக்கபட்டு ரூ.11.42 கோடி மானியம் ஒதுக்கப்பட்டுள்ளது. சொட்டு நீர் பாசனம் அல்லது நுண்ணீர் பாசனம் என்பது முதன்மை குழாய், துணைக்குழாய்கள் மற்றும் பக்கவாட்டு குழாய்கள் ஆகிய அமைப்புகள் வாயிலாக பயிர்களுக்கு தேவையான நீரை, துளித்துளியாக மண்ணின் மேற்பரப்பிலோ அல்லது பயிர்களின் வேர்ப்பகுதியில் நேரடியாகவோ வழங்கும் ஒரு மேம்பட்ட நீர்ப்பராமரிப்பு முறையாகும்.

நீராதாரம் குறைந்து வருவதாலும், சாகுபடி நிலப்பரப்பு குறைந்து வருவதாலும் வாழும் மக்களுக்கு உணவு அளிக்க உற்பத்தித் திறனை அதிகரித்து தரமான உணவு விளைவிப்பை பெருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, கிடைக்கும் நீரை கொண்டு வேளாண்மையில் நீடித்த நிலையான வருவாய் பெற வேண்டிய அவசியமான நிலையில் உழவர்கள் உள்ளனர். இதனை கருத்தில் கொண்டு துளி நீரையும் வீணாக்காது உணவு உற்பத்திக்கு பயன்படுத்த உருவாக்கப்பட்ட திட்டமே நுண்ணீர் பாசனம் என்னும் சொட்டு நீர் பாசன திட்டம் ஆகும்.

தொடர்பு கொள்ளலாம்

சொட்டு நீர் பாசனம் அமைக்க சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியமும், மற்ற விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் வழங்கப்படுகிறது. ஏற்கனவே சொட்டு நீர் பாசனம் அமைத்து 7 ஆண்டுகள் கடந்திருந்தால், உபகரணங்கள் மாற்றிக்கொள்ள மீண்டும் மானியம் வழங்கப்படுகிறது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம விவசாயிகளும் இத்திட்டத்தில் பயன் பெறலாம். ஆர்வமுள்ள விவசாயிகள் சிட்டா, அடங்கல், ரேஷன் அட்டை நகல், ஆதார் அட்டை நகல், வங்கி பாஸ்புத்தக நகல் மற்றும் 2 பாஸ்போர்ட் சைஸ் போட்டோ உடன் அந்தந்த வட்டார தோட்டக்கலை அலுவலகத்ததை கீழ்காணும் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

ஆலங்காயம் வட்டாரம் - 9043493204, ஜோலார்பேட்டை மற்றும் நாட்றம்பள்ளி வட்டாரம் 9095880813, மாதனூர் வட்டாரம் - 8825794936, கந்திலி வட்டாரம் -8838517900 மற்றும் திருப்பத்தூர் வட்டாரம்-7339165526 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.


Next Story