சமையல் எண்ணெய் இறக்குமதி திடீர் சரிவு


சமையல் எண்ணெய் இறக்குமதி திடீர் சரிவு
x

சமையல் எண்ணெய் இறக்குமதியில் திடீர் சரிவு ஏற்பட்டுள்ளது.

விருதுநகர்

உலகச்சந்தையில் பாமாயில், சூரியகாந்தி எண்ணெய், சோயாபீன் எண்ணெய் ஆகிய சமையல் எண்ணெய்களின் விலை குறைந்துள்ள நிலையில் இந்தியாவிலும் சமையல் எண்ணெய் விலையை குறைப்பதற்காக மத்திய அரசு பல்வேறு சலுகைகளை அறிவித்தது.

வரி விதிப்பு

இறக்குமதி வரி விதிப்பையும் குறைத்தது. மேலும் சமையல் எண்ணெய் விலையை ரூ.15 குறைக்க வேண்டும் என சமையல் எண்ணெய் வணிகர்களுக்கு, மத்திய அரசு அறிவுறுத்தியது.

ஆனாலும் சமையல் எண்ணெய் விலை நிர்ணயம் என்பது எண்ணெய் உற்பத்தி மற்றும் தேவை அடிப்படையிலேயே நிர்ணயிக்க முடியும் என்றும் உடனடியாக விலையை குறைப்பது என்பது சாத்தியமில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

பாமாயில் இறக்குமதி

கடந்த ஜூன் மாதம் சமையல் எண்ணெய் இறக்குமதி மே மாதத்தை விட 6.37 சதவீதம் குறைந்துள்ளதாக சமையல் எண்ணெய் வணிக வட்டாரத்தினர் தெரிவித்தனர். கடந்த மே மாதத்தில் 10.41 லட்சம் டன் சமையல் எண்ணெய் இறக்குமதி செய்திருந்த நிலையில் கடந்த மாதம் 9.41 லட்சம் டன் சமையல் எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. மே மாதத்தை விட ஜூன் மாதம் 6.37 சதவீதம் சமையல் எண்ணெய் இறக்குமதி குறைந்துள்ளது.

ஆனாலும் சமையல் எண்ணெய் கடந்த நவம்பர் மாதம் தொடங்கி ஜூன் மாதம் வரை 8 மாதங்களில் 84.9 லட்சம் டன் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. கடந்த வருடத்தில் இதே 8 மாதங்களில் 84.52 லட்சம் டன்தான் சமையல் எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டிருந்தது. எனினும் பாமாயிலை பொறுத்தமட்டில் இந்த 8 மாதங்களில் 43.39 லட்சம் டன் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் கடந்த ஆண்டு இதே 8 மாதங்களில் 51.49 லட்சம் டன் பாமாயில் இறக்குமதி செய்யப்பட்டிருந்தது. எனவே நடப்பாண்டில் பாமாயில் இறக்குமதி குறைந்துள்ளது.

வாய்ப்பு இல்லை

சோயாபீன் எண்ணெய் கடந்த ஜூன் மாதம் 2.3 லட்சம் டன் இறக்குமதி செய்யப்பட்டிருந்தது. கடந்த மே மாதத்தில் 3.73 லட்சம் டன் இறக்குமதி செய்யப்பட்டிருந்தது. சூரியகாந்தி எண்ணெய்யை பொறுத்தமட்டில் மே மாதத்தை விட ஜூன் மாதத்தில் சற்று அதிகமாக இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

ஜூன் மாதம் 1.19 லட்சம் டன் இறக்குமதி செய்யப்பட்ட நிலையில் மே மாதம் 1.18 லட்சம் டன் இறக்குமதி செய்யப்பட்டிருந்தது. ஆனால் கடந்த 8 மாதங்களில் சோயாபீன் எண்ணெய் இறக்குமதி அதிகரித்துள்ள நிலையில் சூரியகாந்தி எண்ணெய் இறக்குமதி குறைந்துள்ளது. எனவே தற்போதைய நிலையில் சமையல் எண்ணெய் இறக்குமதி குறைந்துள்ள நிலையில் சமையல் எண்ணெய்யின் விலையை மத்திய அரசு அறிவுறுத்தியபடி குறைப்பதற்கு வாய்ப்பு இல்லாத நிலை உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் உள்ளூரில் எண்ணெய் உற்பத்தி மற்றும் தேவை அடிப்படையில் தான் விலை நிர்ணயம் செய்ய முடியுமே தவிர அரசு அறிவுறுத்தலின்படி விலையில் மாற்றம் செய்ய முடியாது எனவும் கருத்து தெரிவிக்கப்பட்டது.



Next Story