வடமாநில தொழிலாளர்கள் தங்கியுள்ள பகுதியில் போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு


வடமாநில தொழிலாளர்கள் தங்கியுள்ள பகுதியில் போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு
x
தினத்தந்தி 9 March 2023 6:45 PM GMT (Updated: 9 March 2023 6:46 PM GMT)

விழுப்புரம் அருகே வடமாநில தொழிலாளர்கள் தங்கியுள்ள பகுதியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஏதேனும் அச்சுறுத்தல் இருந்தால் உடனே தகவல் தெரிவிக்குமாறு அறிவுறுத்தினார்

விழுப்புரம்

விழுப்புரம்

பாதுகாப்பு உறுதி

தமிழகம் முழுவதும் வடமாநில தொழிலாளர்கள் பணிபுரியும் இடங்களில் அவர்களது பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் வகையில் அவர்கள் தங்கியிருக்கும் இடத்திற்கே போலீசார் நேரில் சென்று அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு ஏதேனும் பிரச்சினை, அச்சுறுத்தல் இருந்தால் உடனடியாக போலீசாரை தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ள வேண்டுமென கூறி வருகின்றனர்.

அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் பணிபுரிந்து வரும் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக அவர்கள் பணியாற்றும் இடம், தங்கியுள்ள இடங்களுக்கே போலீசார் நேரடியாக சென்று விசாரித்து வருகின்றனர்.

போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு

இந்நிலையில் விழுப்புரம்- நாகப்பட்டினம் 4 வழிச்சாலை பணியில் ஈடுபட்டு வரும் வடமாநில தொழிலாளர்கள் விழுப்புரம் அருகே கரைமேடு பகுதியில் தங்கியுள்ள நிலையில் அவர்களின் இருப்பிடத்திற்கு நேற்று முன்தினம் இரவு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா நேரில் சென்று ஆய்வு செய்து அங்குள்ளவர்களிடம் விசாரணை நடத்தினார்.

அப்போது அவர்களிடம் உரிய பாதுகாப்பாக இருக்கிறீர்களா என்று கேட்டறிந்த அவர், ஏதேனும் பிரச்சினை என்றால் உடனடியாக அருகில் உள்ள போலீஸ் நிலையத்தை தொடர்புகொண்டு தகவல் தெரிவிக்கும்படியும் அல்லது தன்னுடைய செல்போனிலோ, விழுப்புரம் உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு செல்போனிலோ தொடர்புகொண்டு தகவல் தெரிவிக்குமாறு கூறி இருவரின் செல்போன் எண்களையும் கொடுத்தார்.

அறிவுரை

மேலும் வடமாநில தொழிலாளர்களிடம் இங்குள்ள தமிழ்நாட்டு மக்களால் உங்களுக்கு எந்தவித பிரச்சினையும் வராது, எந்தவித இடையூறும் செய்ய மாட்டார்கள் என்றும், அதுபோல் நீங்களும் இங்குள்ளவர்களுக்கு எந்தவித இடையூறும், பிரச்சினையும் செய்யக்கூடாது. உங்களால் எந்தவொரு சிறு பிரச்சினையும் வராமல் கவனமாக பார்த்துக்கொள்ளும்படியும் அறிவுறுத்தினார்.


Next Story