டாஸ்மாக் பார்களில் போலீஸ் சூப்பிரண்டு அதிரடி சோதனை தக்கலையில் பரபரப்பு
தக்கலையில் உள்ள டாஸ்மாக் பார்களில் போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் அதிரடி சோதனை நடத்தினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தக்கலை:
தக்கலையில் உள்ள டாஸ்மாக் பார்களில் போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் அதிரடி சோதனை நடத்தினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
போலீஸ் சூப்பிரண்டு
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் நேற்று திடீரென தக்கலை போலீஸ் நிலையம் வந்து ஆய்வு செய்தார். முதல்நிலை போலீஸ் நிலையமாக உள்ள தக்கலையில் அதிகமாக குற்றவழக்குகள் பதிவாகின்றன. அவற்றிற்கான பதிவேடுகள் முறையாக பராமரிக்கப்படுகிறதா என்பதை அறிவதற்காக ஆவணங்களை பார்த்தார். அதற்கான விளக்கங்களையும் அவர் கேட்டறிந்தார்.
போலீஸ் நிலைய எல்கைக்கு உட்பட்ட இடங்களில் எத்தனை அரசு டாஸ்மாக் கடைகள் உள்ளன. அவற்றில் எத்தனை பார்கள் இயங்குகின்றன, கடைகளில் மதுபானங்களின் விலையைவிட அதிகமாக வசூலிக்கிறார்களா, டாஸ்மாக் மதுபானங்களை வாங்கி திருட்டுதனமாக வெளியில் விற்பனை செய்த குற்றவாளிகளை தொடர்ந்து கண்காணிக்கிறீர்களா என போலீசாரிடம் அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டார். இதனால் பணியில் இருந்த போலீசாரிடையே பரபரப்பும் பதற்றமும் காணப்பட்டது.
அதிரடி சோதனை
ஆய்வின்போது கைதிகள் அறை, ஆவண காப்பக அறை போன்றவற்றை பார்வையிட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரி கிரண் பிரசாத் திடீரென போலீஸ் நிலையத்தின் அருகே இரணியல் சாலையில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு போலீசாருடன் சென்று அதிரடி சோதனை நடத்தினார். டாஸ்மாக் கடை 12 மணிக்கு தான் திறக்கும். அதற்கு முன்பாக பார்களில் வாடிக்கையாளர்கள் வந்திருந்து மது அருந்துகிறார்களா? என்பதை அறிவதற்காக காலை 11.10 மணிக்கு டாஸ்மாக் கடைக்கு சென்ற போது கடை திறக்கப்படவில்லை. ஆனால் பார் திறந்திருந்தது. ஆனால் வாழ்க்கையாளர் யாரும் இல்லை.
பின்னர் அங்கு ஒட்டப்பட்டிருந்த மதுபானத்தின் விலைப் பட்டியலை பார்வையிட்டபின் அதன் அருகில் உள்ள தனியார் மதுபான கடைக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். அங்கு மது அருந்திகொண்டிருந்த வாடிக்கையாளர்களிடம் விசாரணை செய்தார். அதன் பின் அங்கிருந்து மருந்துக்கோட்டை டாஸ்மாக் கடைக்கு சென்று அங்குள்ள பாரை ஆய்வு செய்தார். இதனால் அந்த பகுதி பரபரப்பாக காணப்பட்டது.
டாஸ்மாக் பார்களை போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு செய்ய சென்றபோது கல்குளம் தாசில்தார் கண்ணன் உடன் சென்றார். இது போல் போலீஸ் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டபோது தக்கலை போலீஸ் துணை சூப்பிரண்டு உதயசூரியன், இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சாய்லெட்சுமி, சப் - இன்ஸ்பெக்டர்கள் ஆஷா ஜெபகர், கணேஷ்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.