'கடின உழைப்பு வெற்றியுடன் பல்வேறு பரிசுகளையும் தரும்' சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி அறிவுரை


கடின உழைப்பு வெற்றியுடன் பல்வேறு பரிசுகளையும் தரும் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி அறிவுரை
x

கடினமாக உழைத்தால் வெற்றி நிச்சயம். அது வெற்றியை மட்டுமல்ல எதிர்பாராத பல்வேறு பரிசுகளையும் தரும் என்று சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி கே.வி.விஸ்வநாதன் அறிவுரை வழங்கி பேசினார்.

சென்னை,

சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக அண்மையில் நியமிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த நீதிபதி கே.வி.விஸ்வநாதனுக்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் சார்பில் நேற்று பாராட்டு விழா நடத்தப்பட்டது.

இந்த விழாவில் சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்கா புர்வாலா, மூத்த நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், ஆர்.மகாதேவன் உள்ளிட்ட ஐகோர்ட்டு நீதிபதிகள், அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம், மூத்த வக்கீல்கள் பி.எஸ்.ராமன், பி.வில்சன் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

3-வது தமிழர்

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவரையும் வரவேற்று பேசிய பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ், "சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக இதுவரை 10 வக்கீல்கள் நேரடியாக நியமிக்கப்பட்டு உள்ளனர். அதில் நீதிபதி கே.வி.விஸ்வநாதனும் ஒருவர். இவர், சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி பதவியை அலங்கரிக்கப்போகும் 3-வது தமிழர் ஆவார்.

1966-ம் ஆண்டு பொள்ளாச்சியில் பிறந்த இவர், கோவை சட்டக்கல்லூரியில் படித்து, 1988-ம் ஆண்டு வக்கீலாக பதவி செய்தார். 1992-ம் ஆண்டு டெல்லி சென்று பல்வேறு வழக்குகளில் ஆஜராகி, கடுமையாக உழைத்து இந்த பதவிக்கு வந்துள்ளார்'' என்றார்.

கருணாநிதி பாராட்டு

இவரை தொடர்ந்து பேசிய அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம், "முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை பின்னணி சதி குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட ஜெயின் கமிஷனில் ஆஜரான மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி தமிழில் வாக்குமூலம் அளித்தார். அதை உடனுக்குடன் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துக்கொடுத்து, கருணாநிதியின் பாராட்டை பெற்றவர் தான் நீதிபதி கே.வி.விஸ்வநாதன்'' என்றார்.

இதேபோல, கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், அகில இந்திய பார் கவுன்சில் துணை தலைவர் எஸ்.பிரபாகரன், மூத்த வக்கீல்கள் ஆர்.விடுதலை, பி.எஸ்.ராமன், பி.வில்சன் உள்ளிட்டோரும் பாராட்டி பேசினர்.

கடின உழைப்பு

இதைதொடர்ந்து பேசிய ஐகோர்ட்டு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, "நீதிபதி கே.வி.விஸ்வநாதனின் கடின உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம் தான் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி என்ற பதவி'' என பாராட்டினார்.

இறுதியாக சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி கே.வி.விஸ்வநாதன் ஏற்புரை வழங்கினார். அவர் பேசியதாவது:-

என்னுடைய வக்கீல் பயணம் 1988-ம் ஆண்டு தமிழ்நாட்டில் தான் தொடங்கியது. கடினமாக உழைத்தால் வெற்றி நிச்சயம். அது வெற்றியை மட்டுமல்ல எதிர்பாராத பல்வேறு பரிசுகளையும் தரும். இளம் வக்கீல்கள் எப்போதும் புதிய கண்ணோட்டத்துடன் தங்களது பணியை மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு செயல்பட்டால் வாழ்வின் உச்சத்தை தொட முடியும். என்னால் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி என்ற இடத்துக்கு வர முடிந்தபோது, உங்களாலும் அதை சாத்தியமாக்க முடியும்.

பொறுப்பு

அதேபோல இளம் வக்கீல்கள் வாசிப்பு மற்றும் படிக்கும் பழக்கத்தை கட்டாயமாக்கிக்கொள்ள வேண்டும். இங்கு நடைபெறும் விழா எனக்கு ஆத்மார்த்தமான மகி்ழ்ச்சியை தந்துள்ளது. இந்த நீதிபதி பதவியை எனக்கு வழங்கப்பட்ட பொறுப்பாகவே கருதுகிறேன். அதேபோல திறமைசாலிகளாக உள்ள இந்த காலத்து இளம் வக்கீல்களின் நலனை மூத்த வக்கீல்கள் கருத்தில் கொண்டு அவர்களுக்கு மாதாந்திர ஊக்கத்தொகை, உதவித்தொகை போன்றவற்றை வழங்கினால் அவர்களின் பணி இன்னும் சிறக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் கலந்துகொண்ட அனைவருக்கும் பார் கவுன்சில் துணைத்தலைவர் வேலு கார்த்திக்கேயன் நன்றி தெரிவித்தார்.


Next Story