கொடைக்கானல் வனப்பகுதியில் புலிகள் நடமாட்டத்தை கண்டறிய 256 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள்


கொடைக்கானல் வனப்பகுதியில் புலிகள் நடமாட்டத்தை கண்டறிய 256 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள்
x

கொடைக்கானல் வனப்பகுதியில் புலிகள் நடமாட்டத்தை கண்டறிய 256 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளதாக மாவட்ட வன அதிகாரி திலீப் கூறினார்.

திண்டுக்கல்

கொடைக்கானல் வனப்பகுதியில் புலிகள் நடமாட்டத்தை கண்டறிய 256 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளதாக மாவட்ட வன அதிகாரி திலீப் கூறினார்.

வெளிநாட்டு மரங்கள் அகற்றம்

கொடைக்கானல் மலைப்பகுதியில் சுமார் 20 ஆயிரம் ஏக்கர் நிலங்களில் சவுக்கு, பைன், யூகலிப்டஸ் என பல்வேறு வகை வெளிநாட்டு மரங்கள் பயிரிடப்பட்டது. தற்போது அவை முதிர்ச்சி அடைந்து உள்ளன. இந்த வெளிநாட்டு மரங்களால் நீர்நிலைகள் வறண்டு சுற்றுச்சூழலுக்கு கேடு ஏற்படுவதாகவும், அவற்றை வெட்டி அகற்ற வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, கொடைக்கானல் மலைப்பகுதியில் முதற்கட்டமாக 100 ஹெக்டேர் பரப்பளவில் உள்ள வெளிநாட்டு மரங்களை அகற்றி, அங்கு இயற்கையான சோலை மரங்களை நடவு செய்ய வேண்டும் என்று வனத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.

இதைத்தொடர்ந்து கொடைக்கானல் வனப்பகுதி மற்றும் பேரிஜம் ஏரி பகுதியில் சுமார் 100 ஹெக்டேர் பரப்பளவில் உள்ள வெளிநாட்டு மரங்களை வெட்டி அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுகுறித்து மாவட்ட வன அதிகாரி டாக்டர் திலீப், நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

புலிகள் கணக்கெடுப்பு

ஐகோர்ட்டு உத்தரவுபடி பேரிஜம் மற்றும் கொடைக்கானல் பகுதியில் 100 ஹெக்டேரில் உள்ள வெளிநாட்டு மரங்கள் அகற்றப்பட்டு வருகின்றன. அதற்கு பதிலாக இயற்கையாக வளரக்கூடிய சோலை மரக்கன்றுகள் நடவு செய்யும் பணியும் தொடங்கியுள்ளது. இந்த பணிகள் நிறைவடைந்த உடன் ஐகோர்ட்டில் மீண்டும் அறிக்கை தாக்கல் செய்யப்படும். அப்போது கோர்ட்டு மீண்டும் உத்தரவு அளித்தால் கொடைக்கானல் மலைப்பகுதியில் உள்ள அனைத்து வெளிநாட்டு மரங்களும் அகற்றப்பட்டு, இயற்கை மரங்கள் நடவு செய்யப்படும்.

கொடைக்கானல் வனப்பகுதியில் வனவிலங்குகள் கணக்கெடுப்பு கால் தடங்கள் அடிப்படையில் நடைபெற்றுள்ளது. புலிகள் நடமாட்டம் குறித்து கணக்கெடுப்பு செய்வதற்காக நிபுணர்கள் உதவியுடன் பேரிஜம், மன்னவனூர், பூம்பாறை உள்பட 256 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நடந்த கணக்கெடுப்பில் 5 புலிகள் கொடைக்கானல் வனப்பகுதியில் இருப்பது தெரியவந்தது குறிப்பிடத்தக்கது.

பேட்டரி கார்கள்

பேத்துப்பாறை பகுதியில் யானைகள் அதிக அளவில் உள்ளன. இவை அவ்வப்போது குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து விடுகின்றன. காட்டு யானைகளை விரட்டுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வன விலங்குகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கடந்த 3 மாதங்களில் மட்டும் ரூ.5 லட்சம் நஷ்டஈடு வழங்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகளின் வசதிக்காக மோயர் பாயிண்ட் மற்றும் குணாகுகை பகுதிகளில் கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன. மன்னவனூரில் உள்ள சூழல் சுற்றுலா பகுதியில் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருவதை கருத்தில் கொண்டு அவர்கள் தங்குவதற்காக விடுதிகள் மற்றும் சாலைகள் அமைக்கவும், பேட்டரி கார்கள் இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது வனச்சரகர் சிவகுமார் உடனிருந்தார்.


Related Tags :
Next Story