நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் பெற தமிழக அரசு மின்னல் வேகத்தில் செயல்பட வேண்டும் - அன்புமணி ராமதாஸ்


நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் பெற தமிழக அரசு மின்னல் வேகத்தில் செயல்பட வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
x

நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் பெற தமிழக அரசு மின்னல் வேகத்தில் விரைந்து செயல்பட வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை,

பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

2022-2023-ம் ஆண்டு மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வுகள் வரும் 17-ந்தேதி நடைபெறவிருக்கும் நிலையில், அத்தேர்வில் தோல்வியடைந்து விடுவோமோ? என்ற அச்சத்தில் சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த தனுஷ் என்ற மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். நீட் தொடங்குவதற்கு முன்பாகவே தற்கொலை நிகழ்வுகள் தொடங்கியியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு பெறுவதன் மூலம் தான் மாணவர்களின் தற்கொலைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். தமிழக அரசின் நீட் விலக்குச் சட்டம் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டு 60 நாட்கள் ஆகியும், அதற்கு ஜனாதிபதி ஒப்புதலைப் பெறுவதில் அணுவளவும் முன்னேற்றம் இல்லை.

நீட் விலக்கு சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க மத்திய அரசு இன்று வரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்பது ஒருபுறமிருக்க, தமிழக அரசும் கடந்த 60 நாட்களாக மத்திய அரசுக்கு எந்த அழுத்தமும் கொடுக்கவில்லை என்பதே உண்மை.

மாணவர் சேர்க்கை தொடங்குவதற்கு முன்பாக நீட் விலக்கு சட்டத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல் பெற்று விட்டால் கூட, நடப்பாண்டு மருத்துவ மாணவர் சேர்க்கையை 12-ம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் மேற்கொள்ள முடியும். ஆனால், அதற்கு தமிழக அரசு மின்னல் வேகத்தில் விரைந்து செயல்பட வேண்டும்.

நீட் விலக்கு சட்டம் கவர்னர் மாளிகையை கடப்பதற்கே மொத்தம் 234 நாட்கள் ஆயின. அதன்பின் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டு 60 நாட்கள் நிறைவடைந்து விட்டன. அடுத்த 50 நாட்களில் மருத்துவ மாணவர் சேர்க்கை அறிவிக்கையை அரசு வெளியிட்டாக வேண்டும். 12-ம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் என்றால், அதற்கு முன்பாக நீட் விலக்கு சட்டத்திற்கு ஜனாதிபதியின் ஒப்புதலைப் பெற்றாக வேண்டும்.

அமைச்சர்கள் குழு அல்லது அனைத்துக் கட்சிக் குழுவை டெல்லிக்கு அனுப்பி மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளின் மூலம் நீட் விலக்கு சட்டத்திற்கு ஜனாதிபதி ஒப்புதலைப் பெற வேண்டும். அதன் மூலம் நீட் தேர்வுக்கு அஞ்சி நடைபெறும் தற்கொலைகளை தடுத்து நிறுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story