பெண்கள் அச்சமின்றி வாழக்கூடிய மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது: மகளிர் தினவிழாவில், முதல்-அமைச்சர் பேச்சு


பெண்கள் அச்சமின்றி வாழக்கூடிய மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது: மகளிர் தினவிழாவில், முதல்-அமைச்சர் பேச்சு
x

பெண்கள் பாதுகாப்பு உணர்வுடன், அச்சமின்றி வாழக்கூடிய மாநிலமாக தமிழ்நாடு விளங்கி கொண்டிருக்கிறது என்று சென்னையில் நடந்த மகளிர் தினவிழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

சென்னை,

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் சென்னை எழும்பூரில் உள்ள எத்திராஜ் மகளிர் கல்லூரியில் மகளிர் தினவிழா நடந்தது. இந்த விழாவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். இதில் அமைச்சர்கள் க.பொன்முடி, பி.கே.சேகர்பாபு, கீதா ஜீவன், கயல்விழி செல்வராஜ், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, தயாநிதிமாறன் எம்.பி., பரந்தாமன் எம்.எல்.ஏ. உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியின் போது சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, சமூக நலத்துறை இயக்குனர் ரத்னா, பேராசிரியர் பர்வீன் சுல்தானா ஆகியோர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பூங்கொத்து கொடுத்து மகளிர் தின வாழ்த்துகளை பெற்றனர்.

பூங்கொத்து கொடுத்து மகிழ்ச்சி

அதனைத்தொடர்ந்து தமிழ்நாட்டின் முதல் மின்சார ரெயில் ஓட்டுனர் திலகவதி, டி.ஐ.ஜி. சாமுண்டீஸ்வரி, முதல் பெண் தீயணைப்பு அதிகாரிகள் பிரியா ரவிச்சந்திரன், மீனாட்சி விஜயகுமார், பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ரஷிதா பேகம், இசைத்துறையில் சிறந்து விளங்கும் மாற்றுத்திறனாளி ஜோதி கலை ஆகியோர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, பூங்கொத்து கொடுத்து மகளிர் தின மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். இவர்களுக்கு நினைவு பரிசாக புத்தகத்தை, முதல்-அமைச்சர் வழங்கினார்.

பின்னர், அவ்வையார் விருது, பெண் குழந்தை முன்னேற்றத்துக்கான விருது, பெண் குழந்தைகள் பாதுகாப்புக்கான விருது என சர்வதேச மகளிர் தின சிறப்பு விருதுகளையும், கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி, நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

திராவிட மாடல் அரசு

இந்த நாட்டின் வளர்ச்சி மகளிர் கையில்தான் இருக்கிறது. அதனால் மகளிரை வாழ்த்துவதன் மூலமாக இந்த நாட்டை வாழ்த்தி கொண்டிருக்கிறோம். பெண்ணாக பிறப்பது மட்டுமே பெருமைக்குரியது அல்ல. அத்தகைய பெண் ஒரு சமூகத்தை வழிநடத்துபவராக உயர்ந்து நிற்பதையே நாம் விரும்புகிறோம். ஏன் இந்த நாடு விரும்பி கொண்டிருக்கிறது. மார்ச் 8-ந்தேதி மகளிர்களுக்கு மட்டுமல்ல, மனித குலத்துக்கும், மனித உரிமைகளுக்கும் ஒரு முக்கியமான நாளாக அமைந்துள்ளது. இந்த உலகில் எந்நாளும் போற்றப்பட வேண்டியவர்கள் பெண்கள்.

கல்வி, சமூகநீதி, பெண்ணுரிமை திட்டங்களை அதிகளவிலே திராவிட மாடல் அரசால், நாங்கள் தற்போது செயல்படுத்தி கொண்டிருக்கிறோம். உயர்கல்வி, பள்ளிக்கல்வி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறைகளிலும் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் முன்னுரிமை திட்டங்களின் மூலமாக தமிழ் சமுதாயத்தின் மேம்பாடு என்பது பெரும் பாய்ச்சலை நிகழ்த்தி கொண்டிருக்கிறது.

பெண்களை முன்னேற்றி வருகிறது

புதுமைப்பெண் என்ற உன்னத திட்டத்தை உருவாக்கி செயல்படுத்தி கொண்டிருக்கிறோம். இந்த திட்டத்தின் படி அரசு பள்ளிகளில் படித்து கல்லூரிக்கு செல்லக்கூடிய மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படுகிறது. இந்த திட்டம் மூலம் 1,83,389 மாணவிகளுக்கு ரூ.82 கோடியே 77 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்பட்டிருக்கிறது. பெண்களை அனைத்து வகைகளிலும் முன்னேற்றி வருகிறது நம்முடைய திராவிட மாடல் அரசு.

அனைத்தும் நிறைந்த வளர்ச்சிதான் திராவிட மாடல். இதில் ஆணும், பெண்ணும் அடங்கும். பெண்ணை விலக்கி வைத்துவிட்டு, எதையும் திட்டமிடுவது இல்லை. அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்றால், அதில் பெண் ஓதுவாரும் இடம் பெற்றுள்ளார். இதுதான் திராவிட மாடல். சட்டத்தின்முன் ஆண், பெண் பாகுபாடின்றி அனைவரும் சமமானவர்கள் என்ற இலக்கை எட்டுவதில் நம்முடைய நாட்டிலேயே தமிழ்நாடுதான் முன்னோடி மாநிலமாக இருந்து கொண்டிருக்கிறது.

பெண்கள் பாதுகாப்பு உணர்வுடன் அச்சமின்றி வாழக்கூடிய மாநிலமாக தமிழ்நாடு விளங்கி கொண்டிருக்கிறது. வட மாநிலத்தை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு அண்மையில் அச்சுறுத்தலில் ஈடுபட்டபோது, அடைக்கலம் தேடி தமிழ்நாட்டுக்கு வந்துள்ளார். சென்னை ஐகோர்ட்டில் தான் வழக்கு தாக்கல் செய்தார். அந்த அளவுக்கு பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாக தமிழ்நாடு விளங்கி கொண்டிருக்கிறது.

அடிமைத்தனம் மாறவேண்டும்

பெண்கள் முழுமையாக விடுதலை அடைந்துவிட்டார்கள் என்று நான் சொல்லமாட்டேன். பல பொறுப்புகளுக்கு வந்திருக்கலாம். பலரும் பொருளாதார சுதந்திரத்தை அடைந்திருக்கலாம். ஆனால் மனரீதியாக பெண் என்றால், ஆணுக்கு அடிமைத்தனம் என்பது ஆண்கள் மனதில் இன்னமும் இருக்கிறது. இதனை நாம் எப்படியாவது மாற்றியாகவேண்டும்.

மகளிர் நாள் என்பது பெண்கள் மட்டும் கொண்டாடக்கூடிய நாளாக இல்லாமல், ஆண்களும் சேர்ந்து கொண்டாடக்கூடிய காலமாக அது மாற வேண்டும். கல்வியில், வேலைவாய்ப்பில், தொழிலில், சமூகத்தில், சிந்தனையில், வளர்ச்சியை ஏற்படுத்துவதுதான் திராவிட மாடல் ஆட்சி என்று தொடர்ந்து சொல்லி கொண்டிருக்கிறேன். அத்தகைய சிந்தனை மாற்றங்களை சமூகத்தில் விதைக்க இதுபோன்ற மகளிர் தின விழா பயன்படட்டும் என்று சொல்லி, அத்தனை பேருக்கும் மகளிர் தின வாழ்த்துகளை தெரிவிக்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியின் இறுதியில் சமூக நலத்துறை இயக்குனர் ரத்னா நன்றியுரை கூறினார். இதையடுத்து மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்பட்டன. அதனை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் பார்த்தனர்.


Next Story